Breaking News

பாரதியார் பல்கலைக்கழத்திற்கு 7வது காப்புரிமை

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் அறிவுசார் காப்புரிமை மையம் சார்பில் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் காரணமாக 7வது காப்புரிமை பாரதியார் பல்கலைக்கழத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

முனைவர் பிரீத்தி

மெலனின் என்பது அதிமுக்கியமான நிறமியாகும். இது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் தோல், முடி மற்றும் கண் நிறத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. சூரிய ஒளியால் ஏற்படும் மோசமான சரும சேதங்களை தடுக்கும் இயற்கையான தடுப்பரணாக மெலனின் திகழ்கிறது. 

மெலனின் உற்பத்தியினால் கிடைக்கும் மெலனோசைட்டுகள் சூரிய ஒளியை கிரகித்து செல்களில் உள்ள மரபணுபொருளை பாதுகாக்கிறது. உடலில் ஏற்படும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள், அல்பீனிசம் போன்ற சரும நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் மெலனின் குறைபாட்டால் ஏற்படும். 

புறஊதா கதிர்களின் பாதிப்பால் ஏற்படும் ஸ்க்வாமஸ் செல் கார்சினோமா (SCC), பாசல் செல் கார்சினோமா (BCC), மற்றும் மெலனோமா போன்ற புற்றுநோய்கள் மெலனின் குறைபாடு காரணமாக ஏற்படுகின்றது.

பியோமெலனின் என்பது மெலனின் ஒரு வகையாகும் இதைதொடர்புடைய ஆய்வுகள் இந்தியாவில் மிகக் குறைவாகவே அறியப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள், பறவைகளின் இறகுகள், மனிதர்கள் அல்லது விலங்குகளின் முடிகள் போன்றவற்றில் இருந்து பியோமெலனினைச் சுத்திகரித்து தங்கள் ஆய்வுகளுக்குப் பயன்படுத்துகின்றனர். அதிக அளவில் பியோமெலனினை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்ய இவை போதுமானதாக இல்லை எனவே இத்தகைய மெலனினை அதிகப்படியான தேவைகளை பூர்த்தி செய்ய பாக்டீரியாக்கள் பெரும் மூலமாக கருதப்படுகிறது.

பாரதியார்  பல்கலைக்கழத்தில் நுண்உயிர் தொழில்நுட்பத்துறையில் பேராசிரியர் முனைவர். கே. பிரீத்தி மற்றும் ஆராய்ச்சி மாணவர் முனைவர் சதீஷ் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாக விசாகப்பட்டினம் மற்றும் சென்னை கடற்கரைப் பகுதிகளில் இருந்து பெறப்பட்ட கடல் மாதிரிகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட கடல்சார் ஸ்ட்ரெப்டோமைசஸ் ஸ்பினோவர்ருகோசஸ் (Streptomyces spinaverrucosus) பாக்டிரியாக்களில் பியோமெலனின் மண் முறைகளை பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு புதிய முறையினை கண்டறிந்தனர். மேலும் இதற்கான காப்புரிமைக்காக கடந்த 2018 ஆம் ஆண்டு மத்திய அரசின் இந்திய காப்புரிமை அலுவலகதில் விண்ணப்பிக்கபட்டது. பலதரப்பட்ட தேர்வு முறைகளை கடந்து 27.01.2022 அன்று இந்திய காப்புரிமை அலுவலகத்தால் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

பியோமெலனின் நிறமி இன்றுவரை பாக்டீரியா மூலத்திலிருந்து பிரித்தெடுக்கப்படவில்லை மற்றும் பியோமெலனின் வணிக ரீதியாக எங்கும் கிடைப்பதில்லை. இந்த புதிய செயல்முறை மூலம் அதிக அளவில் பியோமெலனின் உற்பத்தி செய்ய முடியும். மேலும் இக்கண்டுபிடிப்பு விட்டிலிகோ, அல்பிளிசம் மற்றும் மெலிஸ்மா போன்ற தோல் நோய்களுக்கான சிகிச்சை அளிக்க தேவையான நிறமிகளை உற்பத்தி செய்ய வழிவகை செய்கிறது. பியோமெலனின் நிறமியானது உணவு மருந்து மற்றும் அழகு சாதன தொழில்களில் சிவப்பு நிறத்திற்கான பக்கவிளைவுகளற்ற உயிரி நிறமூட்டியாகவும் பயன்படுத்த முடியும்.

இதுதொடர்பாக விளக்கமளித்த பாரதியார் பல்கலைக்கழக அறிவுசார் காப்புரிமை மையத்தின் இயக்குனர் பேராசிரியர் முனைவர் த.பரிமேலழகன் காப்புரிமை பெறும் தொடர் செயல்முறையில் அதன் தொடர்பான காப்புரிமைகள் பற்றிய தேடுதலும், காப்புரிமை பற்றிய குறிப்புரை எழுதுவதும் இன்றியமையாதது ஆகும். 

எனவே பல்வேறு தொடர் நிகழ்வுகளின் மூலம் பாரதியார் பல்கலைக்கழத்தில் தொடர்ந்து பேராசிரியர்களுக்கு மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டதின் விளைவாக 2016 முதல் இன்று வரை 21 காப்புரிமைகள் இந்திய காப்புரிமை அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டு அதில் பல்வேறு பரிசோதனை நிலைகளை கடந்து  7 காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றும் 14 காப்புரிமைகள் காப்புரிமை அலுவலகத்தின் பரிசீலனையில் உள்ளது. இது பல்கலைக்கழத்தின் ஆராய்ச்சி திறனையும் அதன் சமூகம் சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு காப்புரிமை பெற்றதன் மூலம் சமூக வளர்ச்சிக்கும் உறுதுணையாக உள்ளது என்று தெரிவித்தார்.

முனைவர் பிரீத்தி மற்றும் ஆராய்ச்சி மாணவர் முனைவர் சதீஷ் ஆகியோருக்கு  காப்புரிமை பெற்றதற்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் காளிராஜ் தனது பாராட்டுதல்களை தெரிவித்தார் மேலும் எதிர் காலத்தில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் இதேபோன்ற காப்புரிமைகள் பெற வேண்டும் என்று தெரிவித்தார். பல்கலைக்கழக பதிவாளர்(பொ) பேரா. முனைவர். முருகவேல் தங்களது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையம் தெரிவித்தனர்.

No comments

Thank you for your comments