Breaking News

தொண்டர்களை வெற்றி பெறச் செய்வது தலைவர்களின் கடமை... பிரச்சாரத்தில் ஓபிஎஸ் நெகிழ்வான பேச்சு

காஞ்சிபுரம், பிப்.7-

தொண்டர்களுக்காகவே உருவாக்கப்பட்ட கட்சி அதிமுக என்பதால் அவர்களை வெற்றி பெறச் செய்வது நமது கட்சியில் உள்ள ஒவ்வொரு தலைவரும் தனது கடமையாக கருதி இத்தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டும் என திங்கள்கிழமை காஞ்சிபுரத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.

காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, முன்னாள் எம்.பி.காஞ்சி பன்னீர் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, பாலாஜி, பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து கழக ஒருங்கிணைப்பாளரும்,சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது..

அண்ணா பிறந்த புண்ணிய பூமியான காஞ்சிபுரத்திலிருந்து எனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறேன். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தொடர்ந்து நல்லாட்சி தந்த இயக்கம் அதிமுக.அவர்களுக்கு பிறகு வந்த எடப்பாடி கே.பழனிசாமி ஆட்சியிலும் தொடர்ந்து பல மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்த இயக்கம் அதிமுக....

அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த இயக்கமும் அதிமுக.... இந்த இயக்கத்தை எப்படியாவது அழித்து விட வேண்டும் என நினைத்த கட்சி திமுக.... ஆனால் அவர்களது எண்ணங்களை பொடிப், பொடியாக்கியவர்கள் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் என்பதை மறந்து விட முடியாது.... மறக்கவும் கூடாது.... 

எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை உருவாக்கிய போது தொண்டர்களுக்காகவே தோற்றுவித்தார். வலுவான தொண்டர்கள் உள்ள ஒரே இயக்கம் அதிமுக.தொண்டர்களால் தான் இந்த இயக்கம் எஃகு கோட்டையாக உயர்ந்து நிற்கிறது. 

ஒன்றரை கோடி தியாகத் தொண்டர்கள் அதிமுகவில் உள்ளனர். அவர்கள் இத்தேர்தலில் போட்டியிடுவதால் அவர்களை வெற்றி பெறச் செய்வது கட்சியில் உயர் பதவியில் உள்ள ஒவ்வொரு தலைவரும் கடமையாக கருதி கடுமையாக உழைக்க வேண்டும்.

கடந்த தேர்தலில் சில காரணங்களால் நாம் சிறிதளவில் தோற்றுப் போய் இருந்தாலும் இப்போது திமுக ஆட்சிக்கு 10 மாதங்களில் கெட்ட பெயரைத் தான் சம்பாதித்து இருக்கிறது.

இதுவே நமக்கு சாதகமான சூழல்.மக்களும் கொதித்துப் போய் இருக்கிறார்கள்.பொய்யான வாக்குறுதிகளை சொல்லி ஆட்சிக்கு வந்து விட்டு சொன்ன எதையும் நிறைவேற்றவில்லை. தேர்தல் பிரச்சாரத்துக்கு வரப் பயந்து மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்தே தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

அதிமுக அரசு மாதம் தோறும் 20 கிலோ அரிசி,தாலிக்குத் தங்கமும் நிதியுதவியும் வழங்கியது, முதியோர் உதவித் தொகையை 5 ஆயிரத்திலிருந்து 1000 ஆக உயர்த்தியது,பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2500 வழங்கியது.

இப்படியாக நமது அரசின் சாதனைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.ஆனால் திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்தாகும் எனச் சொல்லி அதை ரத்து செய்ய முடியாமல் நாடகம் ஆடுவது, நகைக்கடன் 5 பவுன்வரை அனைவருக்கும் தள்ளுபடி எனச் சொல்லி விட்டு இப்போது தகுதியானவர்களுக்கு மட்டுமே தள்ளுபடி எனச் சொல்லுவது என பல்வேறு பொய்யான வாக்குறுதிகளால் மக்களுக்கு திமுக அரசு மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டிருக்கிறது. இதைச் சாதகமாக்கி நாம் நமது தொண்டர்களை வெற்றி பெறச் செய்வோம் என்றும் பேசினார்.

அறிமுக கூட்டத்தில் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், அதிமுக நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

 

No comments

Thank you for your comments