Breaking News

ஐடி விங் கூட்டத்தில் உண்மையை உடைத்த முதல்வர் ஸ்டாலின்....

சென்னை: 

திமுக ஐடி விங் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்  பேசியது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. திமுக நிர்வாகிகளுக்கு பல முக்கிய அறிவுரைகள், ஆலோசனைகளை முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் வழங்கினார்.

தமிழ்நாடு நிதி அமைச்சராக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுகவில் ஐடி பிரிவு செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். ஐடி விங் தொடங்கப்பட்டதும் நேரடியாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்குத்தான் இந்த பதவி வழங்கப்பட்டது. 

கடந்த 2017-ல் திமுகவில் தகவல் தொழில்நுட்ப அணி என்ற பிரிவு உருவாக்கப்பட்டதை தொடர்ந்து அணியின் செயலாளராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில்தான் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திமுகவில் ஐடி பிரிவு செயலாளர் பதவியில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன் ராஜினாமா செய்தார். 

மன்னார்குடி திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜா ஐடி விங் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில் பிடிஆர் ராஜினாமா குறித்து பல வியூகங்கள், வதந்திகள் இணையத்தில் பரப்பப்பட்டு வந்தன. 

பிடிஆருக்கும் திமுக தலைமைக்கும் மோதல் என்று கூறப்பட்டது.  இணையத்தில் பிடிஆர் நடந்து கொண்ட விதம் பிடிக்காமல் கட்சி தலைமை அவருக்கு கடிவாளம் போட்டதாக கூறப்பட்டது. அவரின் பணிகள் சரியில்லாத காரணத்தால் அவரை ராஜினாமா செய்ய கட்சி தலைமை கோரிக்கை விடுத்ததாக இணையத்தில் சில செய்திகள் உலவி வந்தன. 

அமைச்சர் தனது இலாக்காவில் கவனம் செலுத்துவதால் ஐடி விங்கில் சரியாக கவனம் செலுத்தவில்லை. ஐடி சரியாக பணிகளை செய்யவில்லை என்று திமுக தலைமைக்கு புகார்கள் சென்றதாகவும் கூறப்பட்டது.

அதேபோல் ஐடி விங் வெறும் டேட்டா விங் போல செயல்பட்டதாக திமுக தலைமைக்கு புகார் சென்றதாகவும், சமீபத்தில் இணையத்தில் பிடிஆர் தொடர்பாக எழுந்த சில சர்ச்சைகள் காரணமாகவும் அவர் இப்படி நீக்கப்பட்டு இருப்பதாக, இணையத்தில் உறுதிப்படுத்தப்படாத சில செய்திகள் உலவி வந்தன. 

ஆனால் பிடிஆர் இந்த தகவல்களை எல்லாம் மறுத்தார். அதன்படி, பெருமைக்காக பதவிகளில் ஒட்டிக்கொள்வது எனது அரசியல் இயல்பு அல்ல. அதனால் நான் கட்சியின் ஐடி விங் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தேன். இரண்டு பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் பார்ப்பது சிரமமாக இருந்தது. அதனால் கட்சி பொறுப்பை ராஜினாமா செய்யும் முடிவை எடுத்தேன், என்று குறிப்பிட்டார். 

இந்த நிலையில் திமுக ஐடி விங் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பிடிஆரை பாராட்டி பேசினார். 

அதில், ஐடி விங் உருவாக்கப்பட்டு பிடிஆர் தலைமையின் கீழ் இயங்கியது. இதில் அமைச்சர் பி.டி.ஆர்., பழனிவேல் தியாகராஜன் சிறப்பாகச் செயல்பட்டு வந்தார்.

ஆனால் நிதி அமைச்சரான பின் அவரால் இதில் கவனம் செலுத்த முடியவில்லை. அவருக்கு பணிச்சுமை அதிகரித்துவிட்டது. அதனால் அவரால் இந்த பணிகளை கவனிக்க முடியவில்லை. என்னை சந்தித்த பிடிஆர், பணிச்சுமை அதிகமாக இருக்கிறது.. அதனால் கட்சி பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்கிறேன் என்று குறிப்பிட்டார். 

அவரின் முடிவை நான் ஏற்றுக்கொண்டேன். இதன் பின்பே எம்எல்ஏ டிஆர்பி ராஜாவை அந்த பொறுப்பிற்கு நியமனம் செய்தோம்.

ஒரு கட்சிக்கு இந்த காலத்தில் ஐடி விங் என்பது மிக முக்கியமான ஒன்று. நாம் தகவல் தொழில்நுட்ப காலத்தில் வாழ்ந்து வருகிறோம். செய்திகள் உடனுக்குடன் பரவி வருகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் கட்சியின் ஐடி விங்கும் துரிதமாக செயல்பட வேண்டும். எனவே ஐடி விங் உறுப்பினர்கள் மிக துரிதமாக வேகமாக செயல்பட வேண்டும். 

எதிரணி பரப்பும் பொய்களை, வதந்திகளை உங்களின் உண்மையால் இல்லாமல் ஆக்குங்கள். அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள், என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். பிடிஆர் ராஜினாமா குறித்து பல வதந்திகள் பரவிய நிலையில் முதல்வர் ஸ்டாலின் அதை பற்றிய விளக்கத்தை கொடுத்துள்ளார் .


No comments

Thank you for your comments