பொங்கல் பரிசு தொகுப்பில் மக்களை ஏமாற்றி விட்டார் மு.க.ஸ்டாலின் - ஓபிஎஸ்
கோவை:
பெரியார் கண்ட கனவை நனவாக்கியது ஜெயலலிதா மட்டும் தான். உள்ளாட்சி பதவிகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் ஜெயலலிதா என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
கோவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசார கூட்டம் சிவானந்தா காலனி பகுதியில் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசினார்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக எந்தவித குறையும் சொல்ல முடியாத ஆட்சி நடைபெற்றது. 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை 10 ஆண்டுகளிலேயே கோவை மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் செய்து காட்டினோம். கொங்கு மண்டலம் அதிமுகவின் எஃகு கோட்டையாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் 52 சதவீத மாணவர்கள் உயர்கல்விக்கு செல்ல வித்திட்டவர் ஜெயலலிதா. கொரோனா காலத்தில் அதிமுக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியுள்ளது. மேலும் தொற்றையும் சிறப்பாக கையாண்டது. ஆனால் திமுக அரசு கொரோனா தொற்றை சிறப்பாக கையாளவில்லை.
தேர்தல் நேரத்தில் தி.மு.க. பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்தனர். அதனை மக்களும் நம்பினார்கள். ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை திமுக இதுவரை நிறைவேற்றவில்லை.
ஆட்சி பொறுப்பேற்றதும் நீட் தேர்வு தான் முதல் கையெழுத்து என்று கூறினார். ஆனால் அது நடந்ததா. இல்லை. பெண்களுக்கு 1000 ரூபாய் உதவி தொகையும் இன்று வரை வழங்கவே இல்லை.
அதிமுக ஆட்சியின்போது பொங்கல் பரிசு தரமான பொருட்களாக கொடுக்கப்பட்டது. அத்துடன் ரூ. 2500ம் கொடுக்கப்பட்டது. ஆனால் திமுக கொடுத்த பரிசு தொகுப்பில் பொருட்கள் தரமானதாக இல்லை என்று மக்களே தெரிவிக்கின்றனர். அதோடு பணமும் கொடுக்கவில்லை. பொங்கல் பரிசு தொகுப்பில் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றி விட்டார். மேலும் பொங்கல் பரிசை இங்கு வாங்கினால் மக்களுக்கு தெரிந்து விடும் என்பதால் வடநாட்டில் இருந்து வாங்கி வந்துள்ளது.
பெரியார் கண்ட கனவை நனவாக்கியது ஜெயலலிதா மட்டும் தான். உள்ளாட்சி பதவிகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தவர் ஜெயலலிதா. தற்போது தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளையும் அதிமுகவே கைப்பற்றும். மக்களும் அதிமுக ஆட்சிதான் சிறந்தது என புரிந்து கொண்டு நமக்கு ஆதரவு தர தயாராக உள்ளனர். எனவே நமது கட்சியினர் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments
Thank you for your comments