தேய்ந்த அகப்பையா? தேயாத அகப்பையா? - வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன்
வேலூர், பிப்.10-
அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றால் வேலூருக்கு என்று தனி மரியாதை கிடைக்கும் என வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்று நடந்தது. இதில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 9 மாதங்களாகிறது. 8 மாதங்கள் கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் மக்கள் உயிரை காப்பதிலும் சென்றுவிட்டது. ஆட்சி நிர்வாகம் முழுமையாக நடத்தமுடியவில்லை. தற்போது தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதற்குப் பிறகு பட்ஜெட் தொடர்பான ஆலோசனை நடைபெற உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக பணியாற்றி வருகிறார். பல்வேறு மாநிலங்களில் இருந்து அவருக்கு புகழாரம் சூட்டுகின்றனர். ஆட்சி எப்படி நடத்த வேண்டும் என்பது பற்றி மு.க.ஸ்டாலினிடம் கற்றுக்கொள்ளுங்கள். ஊழல் எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கற்றுக் கொள்ளுங்கள் என கூறுகின்றனர்.
நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் 234 உறுப்பினர்களை துச்சமாக நினைத்து முகத்தில் அடிப்பது போல் நினைத்து திருப்பி அனுப்பி விட்டார். ஆனால் தற்போது மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி உள்ளோம்.
தற்போது அவர் நீட் தேர்வு ரத்து தீர்மானத்தை திருப்பி அனுப்ப முடியாது. அதுதான் சட்டம். ஒன்று அவராகவே வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி வைத்துக் கொண்டால் அவரை திட்டி கொண்டே தான் இருப்போம். ஒருவேளை அவர் தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தால் அவரை திட்டமாட்டோம் அதற்கு பிறகு பார்த்து கொள்ளலாம்.
மக்களுக்கு அனைத்து வளர்ச்சி பணிகள் அடிப்படை வசதிகளை கொண்டு செல்வது உள்ளாட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகிகள் கையில்தான் உள்ளது. ஒரு அகப்பை நன்றாக இருந்தால்தான் அதில் நான்கு துண்டு அதிகமாக விழும். அகப்பை தேய்ந்திருந்தால் 2 துண்டு தான் விழும்.
நாங்கள் நல்ல (வேட்பாளர்கள்) அகப்பைகளாக தேர்வு செய்து நிறுத்தி உள்ளோம். அவர்களை வெற்றி பெற செய்யுங்கள். கட்சி எனக்கு என்ன செய்தது என கேட்பவன் கட்சிக்கு ஏற்பட்ட தொற்று நோய். கட்சிக்காக நான் என்ன செய்தேன் என்பவன் தான் திமுகவின் ரத்த நாணம் என கலைஞர் கூறுவார். அவரது வழியில் செயல்பட்டு வேலூர் மாநகராட்சியில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றால் வேலூருக்கு என்று தனி மரியாதை கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
No comments
Thank you for your comments