பெண்கள் வார்டு ஒதுக்கீடு எந்த அடிப்படையில் நடந்தது?- விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, பிப்.1-
சென்னை மாநகராட்சியில் பெண்கள் வார்டு ஒதுக்கீடு எந்த அடிப்படையில் நடந்தது என்பது குறித்து விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 1996ம் ஆண்டு தமிழ்நாடு பேரூராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் வார்டு மறுவரையறை மற்றும் ஒதுக்கீடு விதிகள், பெண்களுக்கு 50 சதவீதத்துக்கு குறையாமல் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்கிறது.
சென்னை மாநகராட்சியில், மண்டல அளவில் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மொத்த இடங்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் ஜனவரி 17ம் தேதி வார்டு ஒதுக்கீடு தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதில், சில மண்டலங்களில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும், சில மண்டலங்களில் 50 சதவீதத்துக்கு அதிகமான வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னை ஐகோர்ட்டில் என்பவர் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அந்த மனுவில், எந்த நடைமுறையையும் பின்பற்றாமல், எந்த புள்ளிவிவர ஆதாரங்களும் இல்லாமல் வார்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் அடிப்படையில் தேர்தல் நடத்த அனுமதித்தால், அது பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கத்தையே பாதிக்க செய்யும் என்றும் கூறியுள்ளார்.
இந்த வார்டு ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்து, வார்டுகளில் உள்ள பெண்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப, ஒதுக்கீடு வழங்கி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், அதுவரை சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, பெண்களுக்கு வார்டு ஒதுக்கீடு செய்தது என்பது மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலா அல்லது வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையிலா என்பது குறித்து சென்னை மாநகராட்சி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளை மறுநாள் பிப்ரவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
No comments
Thank you for your comments