5 லட்சம் பேரை பலிவாங்கியது ஒமைக்ரான் - எச்சரிக்கை
ஜெனிவா, பிப்.9-
ஒமைக்ரான் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை வியக்க வைத்தாலும், அதன் உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.
கொரோனா தொற்றின் மாறுபாடாக கருதப்படும் ஒமைக்ரான் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பரிக்காவில் இருந்து முதல் முறையாக பரவத் தொடங்கியது. இது மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.
ஆனால், ஒமைக்ரானால் பெரிதாக பாதிப்பு இல்லை என்றே கருதி வந்த நிலையில், உலகளவில் கடந்த நவம்பர் மாதம் முதல் இதுவரை சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார மையத்தின் மேலாளர் அப்டி மஹமுட் கூறியதாவது:-
கொரோனாவின் மாறுபாடான ஒமைக்ரான் தொற்று அறிவிக்கப்பட்டது முதல், இதுவரை உலகளவில் 130 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையில் அரை மில்லியன் இறப்புகள் பதிவாகியுள்ளது. இது மிகவும் அபாயகரமான விஷயம்.
கொரோனாவின் மேலாதிக்க மாறுபாடாக கருதப்பட்ட டெல்டா தொற்றையே ஒமைக்ரான் தொற்று முந்தியுள்ளது. ஒமைக்ரான் லேசான அறிகுறியை ஏற்படுத்துவதாக தோன்றினாலும், இது மிக வேகமாக பரவக்கூடியது. திறமையான தடுப்பூசிகள் செலுத்தும் யுகத்தில் அரை மில்லியன் மக்கள் இறந்திருப்பது கவலையை அளிக்கிறது.
ஒமைக்ரானின் பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை வியக்க வைத்தாலும், உண்மையான பாதிப்பு மற்றும் இறப்பு எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கும்.
ஒமைக்ரான் தொற்றை நாம் இன்னும் முழுமையாக கடக்கவில்லை. அதன் முடிவை நெருங்கி வருகிறோம் என்று நம்புகிறோம். பல நாடுகள் இன்னும் ஒமைக்ரானின் தொற்று உச்சத்தை கடக்கவில்லை. பல வாரங்களாக தொடர்ச்சியாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் மிகவும் கவலையாக இருப்பதாகக் கூறினார்.
No comments
Thank you for your comments