கொரோனா ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை கட்டளை(WAR ROOM) மையமாக மாற்றம்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் (Integrated Command & Control Centre) தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாநகராட்சி கொரோனா-19 கட்டளை மையமாக (COVID-19 WAR ROOM) மாற்றம் செய்யப்பட்டுள்ளது மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்தார்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் தனி அலுவலர் தெரிவித்ததாவது:
"கோவை மாநகராட்சியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காகவும், கண்காணிப்பதற்காகவும் கணினி அமைப்புடன் கூடிய கொரோனா-19 கட்டளை மையம் (COVID-19 WAR ROOM) அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டளை மையத்தில் கொரோனா நோய் தொடர்பாக பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க ஏதுவாக கால் சென்டர் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கால் சென்டரில் மூன்று சிப்டுகள் வீதம் 15 எண்ணிக்கையில் கணினி இயக்குநர்கள் மற்றும் 5 தொழில்நுட்ப ஆலோசகர்களுடன் ஒரு மருத்துவர் ஆகியோர் குழுவாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு உரிய ஆலோசனை மற்றும் அவர்களது உடல்நிலை குறித்த தகவல்கள் பெறப்பட்டு, அதற்கு தகுந்தவாறு மருத்துவ ஆலோசனைகள் உள்ளிட்டவை உடனுக்குடன் வழங்கப்படுகிறது.
தினசரி கொரோனா நோய்த்தொற்று குறித்த தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டு. இக்கட்டுப்பாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள காணொளி சுவர் (Video Wall) மூலமாக கண்காணிக்கப்படுகிறது.மேலும், கொரோனா சேவை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இக்கட்டுப்பாட்டு அறையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு மருத்துவ முகாம்கள், தடுப்பூசி மையங்கள், நோய் ஆலோசனை மையம் (Triage centre) குறித்த தகவல்கள் தொலைபேசி வாயிலாக தெரியப்படுத்தப்படும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்ட நபர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு தகுந்த மருத்துவ ஆலோசனைகள் மற்றும் உளவியல் ரீதியான ஆலோசனைகள் இக்கட்டுப்பாட்டு மையத்தின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி பகுதியிலுள்ள 100 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்வதற்கும், ஆய்வு செய்வதற்கும் 500 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபட 1000 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பணியாற்றி வருகிறார்கள். பொதுமக்களின் கொரோனா குறித்த சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு இந்த கட்டுப்பாட்டு அறையின் மூலம் தகவல்கள் உடனுக்குடன் 24 மணிநேரமும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது" என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்கள்.
No comments
Thank you for your comments