மண்டல அலுவலகத்தில் முற்றுகையிட்டு குடியேறும் போராட்டம்.... பெரும் பரபரப்பு.....
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மண்டல அலுவலகதை முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சியின் 4வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மூலப்பாளையம், ஜீவானந்தம் வீதி, ஸ்டாலின் வீதி, ராஜீவ்வீதி, சீனிவாசராவ் வீதி ஆகிய பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காகவும், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்ட பணிகளுக்காகவும் சாலைகளில் குழிகள் தோண்டப்பட்டன.. இதையடுத்து குழாய்கள் பதிக்கப்பட்டு குழிகள் மூடப்பட்டுள்ளது.
ஆனால் அவை சரிவர மூடப்படாததால் அங்குள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன... மேலும் அந்த பகுதியில் புதர் மண்டியும் காணப்படுவதால் பாம்பு, தேள் போன்ற விஷ பூச்சிகள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன..
இதனால், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சாலையை கடந்து செல்ல அச்சப்படும் அவல நிலை நீடித்துள்ளது.
இதையடுத்து சாலையை சீரமைக்க கோரி பலமுறை மாநகராட்சி அலுவலகத்திலும், மண்டல அலுவலகத்திலும் அதிகாரியை சந்தித்து புகார் மனு கொடுத்துள்ளனர்... ஆனால் அந்த புகார் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதிமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மண்டல அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி இன்று ( 06.01.2022 ), அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மண்டல அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சூரம்பட்டி இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் மற்றும் 4-ம் மண்டல உதவி ஆணையாளர் வடிவுக்கரசி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரோட்டை சீரமைப்பது குறித்து எழுத்துப்பூர்வமாக எழுதி தந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. .
Post Comment
No comments
Thank you for your comments