தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்க தமிழில் பாடப்புத்தகங்கள் மொழி பெயர்ப்பு- ஆளுநர் உரை
சென்னை :
தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் படிப்புகளுக்கான 100 பாடப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன என்று ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரையில்,
தமிழ்மொழியைப் போற்றி, அதன் செம்மையை நிலைநாட்டுவதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. மனோன்மணீயம் சுந்தரனார் அவர்கள் இயற்றிய ‘நீராரும் கடலுடுத்த’ என்ற பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு நிகழ்ச்சிகளில் பாட வேண்டும் என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அறிவித்தார்.
இப்பாடலை தமிழ்நாட்டின் மாநிலப் பாடலாக (State Song) அதிகாரப்பூர்வமாக அறிவித்து, இந்த அரசு ஆணையிட்டுள்ளது. இதன்படி, கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள்,
பொது நிறுவனங்கள் ஆகியவற்றில் நடைபெறும் அனைத்துப் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில், தக்க முறைப்படி தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயமாகப் பாடப்பட வேண்டும். தனியார் அமைப்புகளிலும் இத்தகைய நடைமுறையை ஊக்குவிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ திட்டத்தின் மூலம், அரசு அமைப்புகள், தனியார் பள்ளிகள், கடைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்திலும் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு ஆட்சிமொழிச் சட்டம், 1956-இல் புதிய வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்படும்.
தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், மருத்துவம், பொறியியல் போன்ற
தொழிற் படிப்புகளுக்கான 100 பாடப் புத்தகங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன.
அயலகத் தமிழர் நாள்
ஜனவரி 12 ஆம் நாள் ‘அயலகத் தமிழர் நாளாக’ அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நாள் ஒவ்வோர் ஆண்டும் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்படும். பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ள தமிழர் நலச்சங்கங்கள் அனைத்தையும் ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம், அயலகத் தமிழர்களுக்கு தாய்த் தமிழகத்துடன் உள்ள உறவு வலுப்பெறுவதுடன், தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கவும் உதவும்.
அயலகத் தமிழர்கள், அவர்களது சொந்த ஊர்களில் கட்டமைப்புகளின் மேம்பாட்டிற்கு உதவுவதற்கு ‘தாய் மண்’ திட்டம் வழிவகை செய்யும்.
தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் நலனைப் பேணிக்காப்பதில் இந்த அரசு முனைப்பாக உள்ளது. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களின் வாழ்விடச் சூழலை மேம்படுத்தும் வகையில், முதற்கட்டமாக 176 கோடி ரூபாய் செலவில் 3,510 புதிய வீடுகளைக் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், உயர்த்தப்பட்ட பணக்கொடை, திறன் மேம்பாட்டுப் பயிற்சி,
கல்வி ஊக்கத்தொகை, இலவச ஆடைகள், பாத்திரங்கள், இலவச எரிவாயு இணைப்பு போன்ற பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்கள்.
இவ்வாறு , ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments