வேதா இல்லம் - அதிமுக மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
சென்னை:
போயஸ்கார்டன் இல்லத்தை தீபாவுக்கு கொடுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட அதிமுக மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரண்டாவது நினைவிடம் என்பது தேவையற்றது என்ற தனி நீதிபதி கருத்தில் தவறில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அதிமுக ஆட்சி காலத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக அந்த வீட்டை கையகப்படுத்தியும், அதற்கான இழப்பீடு நிர்ணயித்தும் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டன.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதில் ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் உள்ளது. அதற்காக அரசு பெரும் தொகை செலவு செய்துள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு மக்கள் வரிப்பணத்தில் பெரும் தொகையை செலவு செய்து மற்றொரு நினைவு இல்லம் அமைக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே அரசின் அனைத்து அரசாணைகளையும் ரத்து செய்கிறேன் என்று தீர்ப்பளித்தார்.
மேலும், உத்தரவு நகல் கிடைத்த 3 வாரத்தில் போயஸ் தோட்ட இல்லத்தை வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்படி, வேதா இல்லத்தின் சாவியை மாவட்ட ஆட்சியர் விஜயராணி தீபா, தீபக் ஆகிய இருவரிடம் வழங்கினார்.
அதிமுக மேல்முறையீடு
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து அதிமுக தரப்பிலும், ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில், “ஜெயலலிதா பொது வாழ்க்கையில் பல சாதனைகள் செய்தவர். குறிப்பாக பெண்களுக்காக பல நலத்திட்டங்களை கொண்டு வந்தார். அவரது சாதனைகளை எதிர்கால தலைமுறைக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்த நினைவு இல்லத்தை அமைக்க அப்போதைய அரசு முடிவு செய்தது.
இதற்காக ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசுகளுக்கு இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டது. எனவே அரசின் நடவடிக்கைகளில் எந்த தவறும் இல்லை. எனவே தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.
இந்த மேல் முறையீட்டு வழக்கை நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், சக்திகுமார் சுகுமார குரூப் ஆகியோர் அடங்கிய அமா்வு விசாரித்தனர். இந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது கூறியதாவது,
“ஜெயலலிதா இல்லம் பொதுநோக்கம் இன்றி அரசியல் காரணங்களுக்காகவே கையகப்படுத்தப்பட்டுள்ளது .
ஜெயலலிதாவுக்கு இரண்டாவது நினைவிடம் என்பது தேவையற்றது என்ற தனி நீதிபதி கருத்தில் தவறில்லை. இவ்வழக்கில் அவரது உத்தரவு சரிதான்” என தீர்ப்பளித்தனர்.
No comments
Thank you for your comments