ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கியது... அதிமுக , விசிக உறுப்பினர்கள் வெளிநடப்பு
சென்னை
2022ம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் இன்று (05-01-2022) தொடங்கியது.
முன்னாள் அமைச்சர்கள் மீதான லஞ்ச ஒழிப்பு துறை சோதனை, அம்மா மினி கிளினிக் மூடல் உள்ளிட்ட காரணங்களுக்காக அவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள 3வது மாடியில் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி வைத்தார்.
ஆளுநர் உரையில், இலங்கை தமிழர் நலனுக்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை தமிழரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
ஒமிக்ரான் பரிசோதனை நடத்தும் ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழ்நாட்டில்தான்.
‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை. சமீபத்தில் ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில், சிறந்த முதலமைச்சராக நமது முதலமைச்சர் தேர்வாகியுள்ளார்.
ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலேயே இப்பெயரை முதலமைச்சர் பெற்றிருப்பது பெருமைக்குரியது.
நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு பாகுபாடுகளை உருவாக்குகிறது;
எனவே, நீட் போன்ற நுழைவு தேர்வுகள் மாணவர்களின் சேர்க்கைக்கு தேவையற்றது என இந்த அரசு கருதுகிறது
2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு லட்சம் கோடி டாலர் என்ற இலக்கை அடைய வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக உள்ளார். என ஆளூநர் ஆர்.என். ரவி உரையில் குறிப்பிட்டுள்ளார்.
வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு !
என பாரதியாரின் கவிதை வரியுடன் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தன்னுடைய முதல் உரையை நிறைவு செய்தார் ஆளுநர் ஆர்.என். ரவி
அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு
ஆளுநர் உரையைத் தொடங்கியவுடனேயே அவையில் ஒருபுறம் கூச்சலும், குழப்பமும் எழுந்தது. அதிமுக உறுப்பினர்கள் அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டது, அம்மா பல்கலைக்கழகம் பெயர் மாற்றம், முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
விசிக வெளிநடப்பு
விடுதலை சிறுத்தைக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆளுநருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காததைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
விசிக ஆளும் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சியாக இருந்தும், விசிக எம்.எல்.ஏ.க்கள் சிந்தனைச் செல்வன், ஆளூர் ஷானவாஸ், செய்யூர் பாபு, திருப்போரூர் பாலாஜி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
No comments
Thank you for your comments