தமிழக அரசு நமது நாட்டிற்கே முன்னோடி- முதல்வர் மு.க.ஸ்டாலினை மனதார பாராட்டிய ஆளுநர்
சென்னை :
பதவியேற்ற முதல் நொடியிலிருந்தே, ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் முடுக்கிவிட்டு, மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி, ஆக்ஸிஜனும் அத்தியாவசிய மருந்துகளும் மாநிலமெங்கும் கிடைப்பதை உறுதிசெய்து, தடுப்பூசிப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி, கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலையை திறம்படக் கையாண்ட மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன்.
மாநிலத்தின் பொருளாதாரமும், மக்கள் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிப்படையாமல், கொரோனா பெருந்தொற்றை இந்த அரசு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய முறை நமது நாட்டிற்கே முன்னோடியாக அமைந்தது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளையும் இலவசமாகப் பெறலாம் என இந்த அரசு அறிவித்துள்ளது. இதன் பயனாக, இதுவரை 33,117 பேர் 387 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர் என ஆளுநர் ஆர்.என். ரவி மனமகிழ்ந்து கூறியுள்ளார்.
இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் தனது உரையை அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துடன் துவக்கி உள்ளார்.
கோவிட் -19 தொற்று மற்றும் மருத்துவ வசதிகள் தொடர்பாக ஆளுநர் உரையாற்றியதாவது,
1. உங்கள் அனைவருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளையும், பொங்கல் திருநாள் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இப்புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வில் வளமும், நலமும் பெற்று மகிழ்வுடன் வாழ உளமார வாழ்த்துகிறேன்.
2. பதவியேற்ற முதல் நொடியிலிருந்தே, ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் முடுக்கிவிட்டு, மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி, ஆக்ஸிஜனும் அத்தியாவசிய மருந்துகளும் மாநிலமெங்கும் கிடைப்பதை உறுதிசெய்து, தடுப்பூசிப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி, கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலையை திறம்படக் கையாண்ட மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன். மாநிலத்தின் பொருளாதாரமும், மக்கள் வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிப்படையாமல், கொரோனா பெருந்தொற்றை இந்த அரசு வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய முறை நமது நாட்டிற்கே முன்னோடியாக அமைந்தது.
3. கோவிட் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த, மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கான பல சிறப்பு முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும், வாரந்தோறும் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த அரசு பொறுப்பேற்ற போது, தடுப்பூசிகளுக்குத் தகுதியானவர்களில் 8.09 சதவீத மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 2.84 சதவீத மக்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் என்ற குறைந்த அளவிலேயே செலுத்தப்பட்டிருந்தது. இந்த அரசின் சீரிய முயற்சிகளால் இந்நிலை மாறி, ஏழே மாதங்களில் 86.95 சதவீத மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 60.71 சதவீத மக்களுக்கு இரண்டாம் தவணையும் என 8.55 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்த முயற்சிகள் முழுமையான வெற்றிபெற தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
4. கடந்த 25 டிசம்பர் அன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் அறிவித்துள்ள புதிய கொள்கையைப் பின்பற்றி, 15 முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை மாநில அரசு வழங்கி வருகின்றது. மேலும், முன்களப் பணியாளர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கும் கூடுதல் தவணையில் (precaution dose) தடுப்பூசிகள் வழங்கப்படும்.
5. அண்மையில், தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பெருவாரியான மாநிலங்களில் கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பரவலைத் தடுப்பதற்காக, பன்னாட்டு விமான நிலையங்களில் சோதனையும், ஆய்வுச் செயல்முறைகளையும் அரசு வலுப்படுத்தியுள்ளது. கோவிட்
பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் அனுபவத்தின் அடிப்படையில், நமது நாட்டிற்கே எடுத்துக்காட்டாக மரபணு வரிசை முறை சோதனை வசதிகள் இந்த அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
RT-PCR சோதனை வசதிகளை அதிகரித்தல், ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் பி.எஸ்.ஏ ஆலைகளை (PSA Plants) நிறுவுதல், அவசர சிகிச்சை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்
ஆகிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொண்டு வருகின்றது. இப்புதிய மாற்றம் பெற்ற வைரஸின் சவால்களை எதிர்கொள்வதற்கு அரசு முழுமையான தயார் நிலையில் உள்ளது.
6. கொரோனா தொற்றால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு 25 இலட்சம் ரூபாயும், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ஐந்து இலட்சம் ரூபாயும் நிவாரணமாக இந்த அரசு வழங்குகின்றது.
இது மட்டுமன்றி, இத்தொற்றால் உயிரிழப்பு நேர்ந்த அனைத்துக் குடும்பங்களுக்கும், மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா 50,000 ரூபாயை நிவாரண நிதியாக வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை, 27,432 குடும்பங்களுக்கு இத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
7. இந்த அரசு பொறுப்பேற்ற பின், முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்புகளிலிருந்து 543 கோடி ரூபாய் நன்கொடையாகப் பெறப்பட்டது. இந்நிதியிலிருந்து, இதுவரை கோவிட் தடுப்பு, நிவாரணப் பணிகளுக்கு 541.64 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
8. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு 72,000 ரூபாயிலிருந்து 1,20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இக்காப்பீட்டுத் திட்டத்தின் மூலம், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் அனைத்து சிகிச்சைகளையும் இலவசமாகப் பெறலாம் என இந்த அரசு அறிவித்துள்ளது. இதன் பயனாக, இதுவரை 33,117 பேர் 387 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர்.
9. மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்க்கும் வகையில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்னும் முன்னோடித் திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்கள். உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற தொற்றா நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதைத் தடுக்கும் வகையில் மொத்தம் 257 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை, 42,99,294 நோயாளிகள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளனர். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தொடங்கப்பட்ட ‘வருமுன் காப்போம்’ திட்டத்திற்குப் புத்துயிர் அளிக்கப்பட்டு மாநிலமெங்கும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
10. சாலை விபத்துகளால் ஏற்படும் விலைமதிப்பற்ற உயிர்களின் இழப்புகளைக் குறைக்கும் வகையில், ‘இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம்’ என்ற உன்னதத் திட்டத்தை இந்த அரசு தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் வாயிலாக, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் அளிக்கப்படும் அவசர சிகிச்சைகளுக்கான செலவை அரசே ஏற்கும். இத்திட்டத்தில், முதற்கட்டமாக 609 மருத்துவமனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை, விபத்துகளில் சிக்கிய 4,482 பேர்கள் அவசர சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர்.
இவ்வாறு, தமிழக ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments