வஉசி பூங்கா மைதானத்தில் அலங்கார ஊர்தி காட்சி!
கோவை, ஜன.28-
இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பினை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி இன்று (28.01.2022) முதல் 31.01.2022 வரை பொதுமக்கள் பார்வைக்கு கோவை வஉசி பூங்கா மைதானத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், தெரிவித்துள்ளதாவது,
சென்னையில் 26.012022 அன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில், இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பினை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மூன்று அலங்கார ஊர்திகள் வடிவமைக்கப்பட்டு அணி வகுப்பில் பங்கேற்றது. அவற்றில் ஒன்றான இரண்டாவது அலங்கார ஊர்தி கோவை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளது.
இந்த ஊர்தியில், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தனது புரட்சிகரக் கவிதைகளால் விடுதலை வேள்விக்கு வித்திட்டவரும் சுதந்திரத்திற்காக மட்டுமின்றி சமத்துவம், சமூக விழிப்புணர்வு மற்றும் பெண் விடுதலைக்காக போராடிய பெரும்புலவன் மகாகவி பாரதியார், ஆங்கிலேயரின் கப்பல் வணிகத்திற்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவரும், எஸ்.எஸ்.காலியோ எனும் பிரெஞ்சுக் கப்பலை வாங்கியதால், தேசத் துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு, இரட்டை தீவாந்திர தண்டனை பெற்றவரும், "செக்கிழுத்தச் செம்மல்" வஉ சிதம்பரனார், விடுதலைக்காகப் போராடியவரும்,"ஞானபானு" மற்றும் "பிரபஞ்ச மித்திரன்" என்ற பத்திரிகைகளைத் தொடங்கி, தேசத் தலைவர்களின் அரிய தொண்டினை வெளியிட்டு தமிழகத்தில் விடுதலைத் தாகத்திற்கு வித்திட்ட தியாகி சுப்பிரமணிய சிவா, சுதந்திரப் போராட்டத்திற்காக போராடியவரும், சமூக சீர்திருத்தவாதியுமான சேலம் விஜயராகவாச்சாரி உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலங்கார ஊர்தி கோவை, வ.உசி பூங்கா மைதானத்தில் இன்று (28.01.2022 வெள்ளிக்கிழமை) முதல் 31.012022 திங்கட்கிழமை வரை பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது. இந்த அலங்கார ஊர்தியினை பொதுமக்கள் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 வரை பார்வையிட்டு பயன்பெறலாம். தினசரி மாலை 5.00 மணி முதல் 6.30 வரை சுதந்திரப் போராட்ட வீரர்களை போற்றும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
மேலும் அலங்கார ஊர்தியினை காண வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments