Breaking News

ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் தேசிய வாக்காளர் தினம் உறுதிமொழி ஏற்பு

வேலூர்:

வேலூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதேமில்லத் அரங்கில் 12வது தேசிய வாக்காளர் தினம்  மாவட்ட தேர்தல்  அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில்  வாக்காளர்  உறுதிமொழி  ஏற்று  இன்று (25.01.2022)  கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.  உதவி ஆட்சியர்(பயிற்சி) செல்வி.ஆர்.ஐஸ்வர்யா, கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.இராமமூர்த்தி, மாநகராட்சி ஆணையர் திரு.அசோக் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.விஜயராகவன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். வேலூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.விஷ்ணு பிரியா அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாக்காளர் உறுதிமொழி ஏற்று 3 மூத்த வாக்காளர்களை கௌரவித்து 5 புதிய இளம் வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கி தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய 5 வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி 12வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களிடையே வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக நடைப்பெற்ற பல்வகைப் போட்டியில் வெற்றி பெற்ற 28 மாணவ-மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும், கோப்பைகளையும் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தாவது,

1950 ஆண்டு ஜனவரி 25-ஆம் நாள் அன்று இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவித்த நாளான ஜனவரி 25-ஆம் நாளை ஆண்டுதோறும் தேசிய வாக்காளர் தினமாக நாம் அனைவரும் கொண்டாடி வருகின்றோம். இத்தேசிய வாக்காளர் தின கொண்டாட்டமானது 2011 ஆண்டு முதல் தொடங்கி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

25.01.2022 நாளான இன்று 12வது தேசிய வாக்காளர் தினத்தை நாம் கொண்டாடி வருகின்றோம். மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் ஆட்சிதான் மக்களாட்சி. மக்களாட்சியின் மையமாக இருப்பதுதான் தேர்தலும், வாக்களிக்கும் உரிமையும். 

இந்தியாவிலுள்ள இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய வாக்காளர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. வாக்களிப்பதை பொதுமக்களாகிய ஒவ்வொரு குடிமக்களும் தலையாய கடமையாகக் கருத வேண்டும். 

சாதி, இனம், மதம் ஆகிய வேறுபாடுகளை களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற அனைவரும் வாக்களிக்க தகுதியுடைவர்கள் ஆவர். வாக்காளர் அனைவருக்கும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை ஒன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகின்றது. 

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நாளான 05 ஜனவரி 2022-ன்படி  வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து ஆண் வாக்காளர்கள் 6,25,334,   பெண் வாக்காளர்கள்  6,67,953,  மூன்றாம் பாலினத்தவர்  161  என  மொத்த வாக்காளர்கள் 12,93,448 உள்ளனர். 

நமது மாவட்டத்தில் மொத்தம் 1,301 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ளன. 650 வாக்குச் சாவடி மையங்கள்  அமைந்துள்ளன  எனவும்,  வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தேர்தல் நேரங்களில் தங்களது வாக்களிக்கும் கடமையை தவறாது கடைப்பிடிக்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் அவர்கள் தெரிவித்தார்.

இவ்விழாவில் முதன்மை கல்வி அலுவலர் திரு.க.முனுசாமி மற்றும் மாவட்ட தேர்தல்  வட்டாட்சியர் திரு.சச்சிதானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

No comments

Thank you for your comments