கொரோனா பரவல்... அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
சென்னை, ஜன.14-
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று (13-1-2022) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. கொரோனா அலையை நிர்வகிப்பதில் ஒன்றிய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழ்நாடு துணை நிற்கும் - இந்தியப் பிரதமர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உறுதி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது மிக வேகமாக அதிகரித்து வருகிறது. 3&வது அலை காரணமாக தினசரி பாதிப்பு அதிவேகத்தில் உயர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 1.5 லட்சத்துக்கு மேல் இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 2.47 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 63 லட்சத்தை தாண்டியது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தை தொட்டு உள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் உருமாறிய வைரஸ் காரணமாகத்தான் தற்போது கொரோனா அதிகரித்து 3&வது அலையில் புதிய உச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது. நேற்று காலை நிலவரப்படி ஒமைக்ரான் பாதிப்பு 5,488 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 2,162 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 3,326 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மராட் டிய மாநிலத்தில்தான் அதிகப்படியான பாதிப்பு இருக்கிறது. டெல்டா மற்றும் ஒமைக்ரான் ஆகிய 2 வகை வைரசால் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, பள்ளி, கல்லூரி மூடல், 50 சதவீத பயனாளிகளுக்கு அனுமதி, உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அனைத்து மாநிலங்களும் நடைமுறைப்படுத்தி கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
கொரோனா தடுப்பு குறித்து மாநில சுகாதார துறை செயலாளருடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஏற்கனவே ஆலோசனை நடத்தி இருந்தார். இதற்கிடையே நாட்டில் நிலவும் கொரோனா சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டார். காணொலி வாயிலாக நடந்த இந்த கூட்டத்தில் அரசின் உயர் அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மாநில முதலமைச்சர்களுடன் விரைவில் ஆலோசனை மேற்கொள்ளப்படும். மாவட்ட அளவில் சுகாதார உள்கட்டமைப்பை உறுதி செய்யவேண்டும். அவசரகால கொரோனா நிதி உள்ளிட்ட உதவிகள் மாநிலங்களுக்கு வழங்கப்படும். போர்க்கால அடிப்படையில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும்’’ என்று கூறினார்.
இந்தநிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று (13&1&2022) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநிலங்கள் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உரையாற்றியபோது, கொரோனா தொற்றுநோயின் ஓமிக்ரான் அலையை நிர்வகிக்க தமிழ்நாடு முழுமையாக தயார் நிலையில் உள்ளளதாகவும், தமது அரசு பொறுப்பேற்ற பிறகு, தடுப்பூசி செலுத்துவதை அதிகரித்துள்ளதாகவும், அந்த வகையில் நேற்று வரை, தகுதியுள்ளவர்களில் 64% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், 15 முதல் 18 வயது வரையிலான இளைஞர்களில் 74 சதவிகிதத்தினருக்கு தடுப்பூசி போட்டுள்ளதாகவும், பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கும் தற்போது நல்ல வரவேற்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா நோய்த் தொற்றினைக் கட்டுப்படுத்திட, மாநில மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, தேவையான அனைத்து நகரங்களிலும் கோவிட் பராமரிப்பு மையங்களும் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் தேசிய அளவில் வரையறுக்கப்பட்ட சோதனை விதிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றுவதாகவும், ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையை மட்டுமே பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்ட அவர், ஆர்.டி.பி.சி.ஆர். சோதனைகளின் எண்ணிக்கை, ஆக்சிஜன் உற்பத்தி திறன், ஆக்சிஜன் சேமிப்பு மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளையும் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்றினைக் கட்டுப்படுத்தத் தேவையான அனைத்து விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளைக் கண்டிப்பாக அமல்படுத்துமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் தான் அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நிலைமையைச் சமாளிக்க அனைத்துத் அரசு இயந்திரமும் முழுமையாக தயார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக, இந்த கொரோனா அலையை நிர்வகிப்பதில் ஒன்றிய அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் தமிழ்நாடு துணை நிற்கும் என்று உறுதியளிப்பதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒன்றிய மருத்துவ மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் முனைவர் மன்சுக் மாண்டவியா, பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் மரு. ஜெ. ராதாகிருஷ்ணன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்புப் பணி அலுவலர் முனைவர்.பி. செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments