நடைபெற்ற வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மை பணிகளை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு...
கோவை:
கோவை மாவட்டம் பீளமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.99 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் கட்டிடத்தையும், வடக்கு மண்டல பகுதிகளில் நடைபெற்ற வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தூய்மை பணிகளைக் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா நேரில் ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.38க்குட்பட்ட பீளமேடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் அவர்கள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு முன்பு, பின்பு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், தாய் சேய் நல பாதுகாப்பு அட்டையில் பதிவு செய்து, பராமரிப்பது குறித்த பதிவேடுகளையும். புற நோயாளிகளின் பதிவேடு மற்றும் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அங்குள்ள பராமரிப்பு பதிவேடுகள் மற்றும் கணினி பதிவேற்றம் (Scanning Centre) செய்யும் மையத்தில் அதன் செயல்பாடுகளைக் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து, அம்மையத்தில் ரூ.99 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் கூடுதல் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் குறித்து பார்வையிட்டார். கட்டுமானப் பணிகளை தரமானதாகவும், விரைவாகவும் முடித்து மருத்துவமனையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டுமென மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, பாப்பநாயக்கன்பாளையம் இலட்சுமனபுரம் பகுதியில் மியாவாக்கி மரக்கன்றுகள் நடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாநகராட்சி ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தம் செய்து குப்பைகளை உடனடியாக அகற்றியும், கால்வாயிலுள்ள செடி, கொடிகள், தேங்கியுள்ள குப்பைகளை தூர்வாரி கழிவுநீர் தங்குதடையின்றி செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, வார்டு எண்.40க்குட்பட்ட காமதேனு நகர் பகுதியிலுள்ள வார்டு அலுவலகம் மற்றும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளிகளுக்கு சென்று பள்ளியின் கழிவறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, கழிவறைகளை தூய்மையாக வைத்திருக்கவேண்டுமென அறிவுறுத்தினார்கள்.
இந்த ஆய்வின்போது, வடக்கு மண்டல உதவி ஆணையாளர் திருமதி.மோகனசுந்தரி, உதவி செயற்பொறியாளர் செந்தில்பாஸ்கர், மண்டல சுகாதார அலுவலர் இராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments