Breaking News

நைனாமலை பெருமாள் கோயில் மலைப்பாதை பணியை அமைச்சா்கள் நேரில் ஆய்வு...!

நாமக்கல், ஜன.6-

பிரசித்தி பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு செல்லும் மலைப்பாதை ரூ.13 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுவது தொடா்பாக  அறநிலையத் துறை சேகா்பாபு,  சுற்றுலா துறை அமைச்சர் எம்.மதிவேந்தன் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.

நாமக்கல் புதன்சந்தை அருகே நைனாமலையில்  வரதராஜபெருமாள்  கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளிலும், வைகுந்த ஏகாதசி தினத்தன்றும், முக்கிய விசேஷ தினங்களிலும் பக்தா்கள் அடிவார பகுதியில் இருந்து 3500 படிக்கட்டுகளை கடந்து மலையில் உள்ள பெருமாளை தரிசிக்க செல்வார்கள்... 

இந்நிலையில், இக்கோயிலுக்கு வாகனங்கள் செல்லும் வகையில் மலைப்பாதை அமைக்க வேண்டும் என பக்தா்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன் குறிப்பிட்ட தொலைவுக்கு மண் சாலை மட்டும் போடப்பட்டது. உரிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் தாா்சாலை அமைக்கும் பணி தாமதமாகி வந்தது. 

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில், சுற்றுலாத் துறையின் பட்டியலிலும் உள்ளது.  எனவே, இரு துறை சாா்ந்தும் நிதி ஒதுக்கீடு செய்தால் மலைப் பாதையில் தாா் சாலை அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், தற்போது சுற்றுலாத் துறை, அறநிலையத்துறை இணைந்து 7 கிலோ மீட்டா் தொலைவுக்கு ரூ.13 கோடியில் மலைப்பாதையை அமைக்க முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியும் நெடுஞ்சாலைத் துறையால் விரைவில் கோரப்பட இருக்கிறது.

இந்த நிலையில்  நாமக்கல்லுக்கு வந்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு, நைனாமலை மலைப்பாதையை நேரில் பாா்வையிட்டாா். அங்கிருந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் சாலை பணி தொடா்பான விவரங்களை கேட்டறிந்தாா்.

சுற்றுலாத் துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா்  ராஜேஷ்குமாா்,  நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர்  பெ.ராமலிங்கம்,  நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் மற்றும் அதிகாரிகள் உடனிருந்து அவரிடம் விளக்கங்களை அளித்தனா்.

நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வாகனங்களில் பக்தா்கள் செல்லும் வகையில், விரைவில் பணிகளை தொடங்கி சாலையை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா்கள் தெரிவித்தனா். 

இதனைத் தொடா்ந்து ராசிபுரம், வெண்ணந்தூா் பகுதிகளில் உள்ள அறநிலையத் துறை கோயில்களை அவா்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டனா்.

No comments

Thank you for your comments