Breaking News

புதிய பஸ் நிலையத்தை சரியாக கட்ட வேண்டும்... எச்சரிக்கை விடுத்த அமைச்சர் துரைமுருகன்

வேலூர், ஜன.5-

வேலூர் புதிய பஸ் நிலையத்தை சரியாக கட்ட வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வேலூர் புதிய பஸ் நிலையம் ரூ.45 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.  இங்கு முதல் தளத்தில் வணிக வளாகம், ஆண், பெண் கழிப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், தானியங்கி வசதி, பயணிகள் காத்திருப்பு அறை, ஓய்வறை, வாகனங்கள் நிறுத்துமிடம் (பார்க்கிங்) உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் துரைமுருகன் 04-01-2022 அன்று  காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது அமைச்சர் துரைமுருகன் அவர் கூறியதாவது, 

புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகளை பார்த்தால் கொரோனா போல் உள்ளது. தாறுமாறாக பஸ் நிலையத்தை கட்டி வருகின்றனர். பக்கத்தில் உள்ள தனியார் இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் பஸ் நிலையத்தில் தண்ணீர் தேங்கும் அளவிற்கு கட்டுமானப்பணிகள் திட்டமிடப்பட்டு நடந் துள்ளது.

புதிய பஸ் நிலையத்தில் 2 நுழைவு வாயில்கள் அமைக்கப்படும். மேலும் நுழைவுவாயில் அருகே எந்தவிதமான கடைகளும் கட்டக்கூடாது. கழிவறைகள் நவீனமாக கட்டி முடிக்கப்பட வேண்டும்.

இனிவரும் காலங்களில் புதிய பஸ் நிலையத்தை அடிக்கடி ஆய்வு செய்வேன். இதில் முறை கேடாக கட்டப்படுவது தெரிய வந்தால் சிபிசிஐடி மூலம் விசாரணை நடத்தப்பட்டு தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலூர் கிரீன் சர்க்கிள் இருக்கும் வரை அந்த இடத்தில் போக்குவரத்து நெரிசல் தீர்க்கமுடியாது. கிரீன் சர்க்கிள் பகுதியில் ஓட்டல் கடைகள் முன்பாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் மணல் குவாரி தொடங்குவது குறித்து அரசு அறிவிப்பு வெளியிடும். மேலும் எந்த பகுதியிலும் அனுமதி இல்லாமல் தற்போது கல்குவாரிகள் இயங்கவில்லை.

வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரி அருகே மேம்பாலம் அமைப்பது குறித்து நீண்ட நாட்களாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. வேலூர் ஆட்சியர் அலுவலகம் காங்கேயநல்லூர் இடையே பாலாற்றில் பாலம் அமைப்பது குறித்து ஏற்கனவே திட்டமிடப் பட்டுள்ளது. 

அந்த இடத்தில் பாலம் அமைந்தால் புதிய பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments

Thank you for your comments