கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கல்
ஈரோடு, ஜன.5-
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கிட தமிழக முதலமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 1725 நபர்கள் இழப்பீடு கோரி விண்ணப்பித்துள்ளனர். அதில் 815 நபர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
47 விண்ணப்பங்கள் வெளிமாவட்டங்களைச் சார்ந்தது என்பதால் அந்தந்தமாவட்டங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 29 மனுக்களில் வாரிசு மற்றும் சட்டபிரச்சனை உள்ளதால் உடனடியாக இழப்பீடு வழங்கப்படாமல் விசாரணையில் இருந்து வருகிறது. 37 மனுக்களில் முகவரி முழுமையாக இல்லாமலும், 31 மனுக்களில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் உள்ளன.
எஞ்சிய 81 மனுக்களில் மருத்துவஆவணங்கள் முழுமையாக இணைக்கப்படவில்லை. இம்மனுக்கள் சரிபார்ப்பிற்காக சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தகுதியானவர்கள் கொரோனா பரிசோதனை, சிகிச்சை ஆவணம், இறப்பு மற்றும் வாரிசுசான்றுகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக பேரிடர் மேலாண்மைப் பிரிவு அல்லது சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்து ரூ.50 ஆயிரம் இழப்பீடு பெற்றுக்கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments