Breaking News

பேருந்து-எரிவாயு லாரி நேருக்கு நேர் மோதி விபத்து- முக்கிய செய்தி தொகுப்பு

பாக்கூர், ஜன.6-

பேருந்தில் பயணம் செய்த 16 பேர் உயிரிழந்தனர். 26 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். லாரியில் இருந்த சிலிண்டர்கள் எதுவும் வெடிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்டத்தில் நேற்று காலையில் பேருந்தும், எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. கோவிந்த்பூர்-சாகிப்கஞ்ச் நெடுஞ்சாலையில் பாதர்கோலா கிராமத்தின் அருகில் நிகழ்ந்த இந்த விபத்தில் பேருந்து கடுமையாக சேதமடைந்தது.

பேருந்தில் பயணம் செய்த 16 பேர் உயிரிழந்தனர். 26 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக லாரியில் இருந்த சிலிண்டர்கள் எதுவும் வெடிக்கவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு முதல்வர் ஹேமந்த் சோரன் இரங்கல் தெரிவித்துள்ளார். 

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு வாகனங்களும் அதிக வேகத்தில் வந்தபோது, கடும் பனி மூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

👀  👀 💐 👀 👀

கொரோனா வீட்டுத்தனிமை

மத்திய அரசின் புதிய விதிகள் வெளியீடு

புதுடெல்லி, ஜன.6-

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமையில் இருப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை புதிய வழிமுறைகளை நேற்று வெளியிட்டுள்ளது.

ஒமைக்ரான் வைரசால் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கி விட்டது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் தனிமையில் இருப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை புதிய வழிமுறைகளை நேற்று வெளியிட்டுள்ளது. கொரோனாவால் வீட்டுத்தனிமையில் இருப்போருக்கு தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல் இல்லை என்றால் 7-வது நாளில் மறுபரிசோதனையின்றி தனிமை காலத்தை முடித்துக் கொள்ளலாம் என்பது உள்பட பல்வேறு புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

👀  👀 💐 👀 👀

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் 

புதுடெல்லி :

கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி ஊட்டி வெலிங்டன் ராணுவ கல்லூரிக்கு முப்படைகளின் தலைவர் பிபின் ரவாத் மற்றும் அவரது துணைவியார் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து முப்படைகளின் கூட்டு விசாரணைக் குழு ஆய்வு நடத்தியது அந்த கூட்டு விசாரணைக் குழுவின் சார்பில் இந்திய விமானப்படை உயரதிகாரிகள் ஜனவரி 5ஆம் தேதி இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து விபத்து காண காரணம் குறித்து கூட்டு ஆய்வில் தெரியவந்த உண்மைகளை விளக்கினர்.

ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணங்கள் என்ன என்று பருவநிலை மாற்றம். எந்திர கோளாறு. விமானியின் தவறு, விபத்துக்கான அனைத்து வாய்ப்புகள் குறித்தும் விமானப்படை அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சரிடம் விலகியதாக தெரிகிறது. விசாரணைக் குழுவின் தலைவராக ஏர் மார்ஷல் மனவேந்திர சிங் இருந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

முன்னதாக விசாரணை குறித்து வெளியான தகவல் ஒன்றில் ஹெலிகாப்டரில் எந்த கோளாறும் இல்லை என்று விசாரணையில் முடிவு செய்யப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால் அந்தச் செய்தி பின்னர் உறுதி செய்யப்படவில்லை.

👀  👀 💐 👀 👀

கேரளாவில் மீண்டும் பரவிய பறவை காய்ச்சல்

 20,268 கோழிகள், வாத்துகள் அழிப்பு

திருவனந்தபுரம், ஜன.6-

கேரளாவில் கடந்த 7 ஆண்டுகளில் 4வது முறையாக பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதன் காரணமாக பண்ணையாளர்கள், வியாபாரிகள் கடும் இழப்பை சந்தித்து உள்ளனர்.

கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் ஏராளமான பறவை பண்ணைகள் உள்ளன.

இப்பண்ணைகளில் உள்ள சில வாத்துகள் மற்றும் கோழிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தன. பறவைகள் திடீரென இறந்ததால் அவற்றின் மாதிரிகளை பண்ணையாளர்கள் போபாலில் உள்ள கால்நடை ஆய்வகத்திற்கு ஆய்வுக்கு அனுப்பினர்.

இதில் இறந்துபோன பறவைகளுக்கு எச் 5 என் 1 வகை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இறந்திருப்பது தெரியவந்தது. இது கேரள மாநில கால்நடை துறை அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆலப்புழா மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு சென்ற கால்நடை துறை அதிகாரிகள் அங்கு பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட பண்ணைகளில் வளர்க்கப்பட்ட வாத்து மற்றும் கோழிகளை உடனே அழிக்க உத்தரவிட்டனர்.

அதன்படி பள்ளிப்பட்டு மற்றும் அம்பலபுழா பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் வளர்க்கப்பட்ட 11,143 கோழிகள் மற்றும் 9125 வாத்துகள் என மொத்தம் 20,268 பறவைகள் அழிக்கப்பட்டன. அவற்றை அதிகாரிகள் குழிதோண்டி புதைத்தனர்.

இதற்கிடையே நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட இந்த பண்ணைகளில் இருந்த 13, 500 முட்டைகள், 9650 கிலோ கோழி தீவனங்களும் அழிக்கப்பட்டன. இப்பகுதியில் உள்ள பண்ணைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கேரளாவில் கடந்த 7 ஆண்டுகளில் 4வது முறையாக பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதன் காரணமாக அங்கு பறவை பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கடும் இழப்பை சந்தித்து உள்ளனர்.

பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட பகுதிகளில் கேரள கால்நடை துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பண்ணைகள் அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கிருமி நாசினி தெளிக்கும் பணியும், அங்கு வசிப்போருக்கு நோய் அறிகுறி இருக்கிறதா? என்பதை கண்டறியும் பணியும் நடந்து வருகிறது. இதற்காக சுகாதார பணியாளர்கள் குன்னும்மா, தகழி, குட்டநாடு பகுதிகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

👀  👀 💐 👀 👀

இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் விமான சேவைக்கு தடை-ஹாங்காங் அறிவிப்பு

ஹாங்காங், ஜன.6- 

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளால் ஒமைக்ரான் பரவுவதால் விமான சேவைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி 58,097 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதேபோல 2,135 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்துள்ளது.  

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமிருந்துதான் ஒமைக்ரான் தொற்று அதிகம் பரவுவதாக குறிப்பிட்டுள்ள ஹாங்காங் அரசு, நோய்தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய 8 நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்படும். இந்த உத்தரவு வரும் சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும், 2 வாரங்களுக்கு அமலில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

👀  👀 💐 👀 👀

அமெரிக்காவில் ஒரே நாளில்

10 லட்சம் பேருக்கு கொரோனா

வாஷிங்டன், ஜன.6-

அமெரிக்காவில் இப்போது டெல்டாவுக்கு பதிலாக ஒமைக்ரான் வைரஸ்தான் ஆதிக்கம் செலுத்தி, அமெரிக்க மக்கள் வாழ்க்கையை சுனாமி போல தாக்கி வருகிறது.

வல்லரசு நாடான அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவமாடி வருகிறது. ஒவ்வொரு நாளும் அங்கு தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாளும் புதிய உச்சங்களை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தும் நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) அங்கு புதிய உச்சமாக ஒரே நாளில் 10 லட்சத்து 42 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

4 நாட்களுக்கு முன்பு அங்கு தினசரி பாதிப்பு 5 லட்சத்து 90 ஆயிரமாக இருந்தது. அதைப்போன்று இப்போது இரு மடங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவை அதிர வைத்துள்ளது.

இதுவரை வேறு எந்தவொரு உலக நாட்டிலும் தினசரி கொரோனா பாதிப்பு 10 லட்சம் என்ற எண்ணிக்கையைத்தொட்டது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அங்கு தினசரி பாதிப்பு விகிதம் 4லு லட்சமாக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவுக்கு வெளியே இந்தியாவில்தான் கடந்த மே மாதம் 7-ம் தேதி கொரோனா தினசரி பாதிப்பு 4.14 லட்சமாக பதிவாகி இருந்தது.

அமெரிக்காவில் இப்போது டெல்டாவுக்கு பதிலாக ஒமைக்ரான் வைரஸ்தான் ஆதிக்கம் செலுத்தி, அமெரிக்க மக்கள் வாழ்க்கையை சுனாமி போல தாக்கி வருகிறது. புதிய பாதிப்புகளில் 73 சதவீதம் ஒமைக்ரான்தான் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

நியூயார்க், இல்லினாய்ஸ், விஸ்கான்சின் போன்ற வட மாகாணங்களும், புளோரிடா, ஜார்ஜியா, அலபாமா மாகாணங்களிலும் கொரோனா பாதிப்பு மிக மோசமாக உள்ளது.

கடந்த வாரத்தில் அமெரிக்காவில் 100-ல் ஒருவர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக விமான சேவைகள் ரத்தாகி வருகின்றன. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்படுகின்றன. நோயாளிகள் வெள்ளத்தால் ஆஸ்பத்திரிகள் மூழ்கடிக்கப்படுகின்றன.

இதற்கு மத்தியில் 12 முதல் 15 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு பைசர் பூஸ்டர் ‘டோஸ் ’ தடுப்பூசி போடுவதற்கு உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எப்.டி.ஏ. ஒப்புதல் அளித்துள்ளது.

2-வது ‘டோஸ்’ தடுப்பூசி போட்டு 5 மாதங்கள் ஆன சிறுவர், சிறுமியர் பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

👀  👀 💐 👀 👀

இந்திய பெருங்கடலில் 

சீனாவின் நடமாட்டத்தை கண்காணிக்க

2 அதிநவீன போர் விமானங்கள்

புதுடெல்லி, ஜன.6-  

அதிநவீன போர் விமானங்கள் சுமார் 35 மணி நேரம் தொடர்ந்து பறந்து கடல் மற்றும் நிலப்பரப்பில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் படைத்தவையாகும்.

‘பொசைடன் 8ஐ’ என்ற ரகத்தை சேர்ந்த 8 விமானங்களை கடந்த 2013-ம் ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து இந்தியா முதல் முறையாக வாங்கியது. இவை அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளி விமானப்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 2-ம் கட்டமாக வாங்கப்பட்ட 4 விமானங்கள் கோவாவில் உள்ள ஐ.என்.எஸ். ஹான்சாலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இவை இந்திய பெருங்கடலில் சீனாவின் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 

கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் சீன வீரர்களின் நடமாட்டத்தை கண்காணிக்கவும் இந்த வகை விமானங்களை இந்தியா பயன்படுத்தியது. மேலும் கடல் பகுதியில் கண்காணிப்பை பலப்படுத்த 2 டிரோன்களை அமெரிக்காவிடம் இருந்து கடந்த ஆண்டு இந்தியா வாங்கியது.

இந்த நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில் வான் ரோந்துப் பணிகளில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போர் விமானங்களை இந்தியா சேர்த்துள்ளது.

இது தொடர்பாக இந்திய விமானப்படையின் செய்தித் தொடர்பாளர் விவேக் மத்வால் கூறியதாவது:-

நீர்மூழ்கி கப்பல்களை கண்டறியும் போர் விமானமும், கடல் பகுதியை வானில் இருந்து உளவு பார்க்கும் ‘பொசைடன் 8ஐ’ அதிநவீன கடல் ரோந்து விமானமும் அமெரிக்காவிடம் இருந்து கடந்த மாதம் 30-ந்தேதி இந்தியா பெற்றது. இதில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. தற்போது அவை இந்திய பெருங்கடல் பகுதியில் ரோந்துப் பணியில் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் மேலும் 30 அதிநவீன டிரோன்களையும் அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இவை சுமார் 35 மணி நேரம் தொடர்ந்து பறந்து கடல் மற்றும் நிலப்பரப்பில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் படைத்தவையாகும்.

👀  👀 💐 👀 👀

நம்மையும், சமுதாயத்தையும் பாதுகாக்க விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்

புதிய கொரோனா தொற்றுப் பரவலை சமாளிப்பதில், கடந்த கால அனுபவங்களை பின்பற்றி அவசர உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.  

முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், நம்மையும், சமுதாயத்தையும் பாதுகாத்தல் ஆகிய விதிமுறைகளை எல்லா காலத்திலும் பின்பற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய வம்சா வளி அமெரிக்க மருத்துவர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 15 ஆவது உலக சுகாதார உச்சிமாநாட்டில் குடியரசு துணைத் தலைவரின் பதிவு செய்யப்பட்ட உரை வெளியிடப்பட்டது.  இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணர்கள் உலகின் எப்பகுதியில் இருந்தாலும், தங்களது இருப்பை சிறப்பாக வெளிப்படுத்தி நாட்டுக்கு பெருமை சேர்த்து வருவதாக அவர் பாராட்டினார். “வசுதைவக் குடும்பகம்” என்னும் மதிப்பை உலகம் முழுவதும் பறைசாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டார். 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்று வலியுறுத்திய திரு நாயுடு, பெற்றோர்கள் தங்கள் பதின்பருவ குழந்தைகள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டாமல் அனைவரும் ஒத்துழைப்பு நல்கி பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். 

நகர்ப்புறங்களில் உள்ள மருத்துவ வசதி, கிராமப்புறங்களில் இன்னும் கிடைக்காத நிலை உள்ளது என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், இதில் உள்ள இடைவெளியை சரிசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட கோர்பேவாக்ஸ், கோவோவாக்ஸ் தடுப்பூசிகளை அமெரிக்க அமைப்புடன் சேர்ந்து இந்திய நிறுவனங்கள் தயாரித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், இந்திய-அமெரிக்க சுகாதார ஒத்துழைப்பு நிச்சயம் இரண்டு நாடுகளுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுமைக்கும் பயனளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

👀  👀 💐 👀 👀

உ.பியில் நடைபெற இருந்த  அனைத்து பொதுக் கூட்டங்களும் ரத்து-காங்கிரஸ் அறிவிப்பு

லக்னோ, ஜன.6-

கொரோனா அதிவேகமாக பரவும் சூழலில் உ.பியில் நடைபெற இருந்த அனைத்து பொதுக்கூட்டங்களையும் ரத்து செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நொய்டாவில் இன்று நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தை பாஜக ரத்து செய்துள்ளது. 

உத்தரப் பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன.

இதையடுத்து நேற்று முன்தின்ம பரேய்லி மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சி தலைமையில்,  ‘பெண்கள் நாங்களும் சண்டையிடுவோம்’ என்ற பெயரில் மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். மாரத்தான் நிகழ்ச்சியின் போது பெண்கள் பலரும் முகக்கவசம் அணியவில்லை, மேலும் சிலர் கூட்ட நெரிசலில் தடுக்கி விழுந்ததில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். இதையடுத்து, கொரோனா அதிவேகமாக பரவும் சூழலில் உ.பியில் நடைபெற இருந்த அனைத்து பொதுக்கூட்டங்களையும் ரத்து செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அம்மாநிலம் முழுவதும் நடைபெற இருந்த 8 பொதுக்கூட்டங்களும் நடைபெறாது என தெரிவித்துள்ளது.

மேலும் நொய்டாவில் பாஜக சார்பில் இன்று நடைபெற இருந்த  பொதுக்கூட்டத்தையும் ரத்து செய்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

No comments

Thank you for your comments