Breaking News

கட்டுப்பாடுகளுடன் மீண்டும் மாடு விடும் விழா நடத்த அனுமதி - மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்

வேலூர்:   

வேலூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் மாடு விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது

வேலூர் மாவட்டத்தில், 2022-ஆம் ஆண்டு எருது விடும் விழா நடத்துவது தொடர்பாக அரசினால் தெரிவித்துள்ள கட்டுப்பாடுகள், நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகளை விழா குழுவினர் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு நிலைகளில் விழா குழுவினர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 

இருப்பினும், அரசு விதித்த நிபந்தனைகள் மற்றும்  வழிகாட்டு நெறிமுறைகளை விழாகுழுவினர் சரியான முறையில் கடைபிடிக்காமல் அலட்சியத்துடன் விழா நடத்தி வருவதும்,  கோவிட் பெருந்தொற்று தொடர்பான அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் அளவுக்கதிகமாக கூட்டம் சேர்வது, முகக்கவசம் அணியாமல் நிகழ்வில் பங்கேற்பது, சமூக இடைவெளியை பின்பற்றாமல் பெருமளவில் கூட்டம் கூடுவது போன்ற விதிமீறல்களும் நடைபெறுவது மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவந்தது. 

இதைதொடர்ந்து கடந்த 23.01.2022ஆம் தேதி முதல் எருதுவிடும் விழா நிகழ்ச்சி நடத்துவது தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டது. 

இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சார்நிலை அலுவலர்கள் மற்றும் விழா குழுவினர்களுடன் மாடு விடும் விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று (24/01/2022) நடந்தது. மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். 

மேற்படி கூட்டத்தில் விழா குழுவினர்கள் அரசின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுவதாக உறுதியளித்ததின்பேரில் இனிவரும் நாட்களில் விழா நடத்தப்படும் கிராமங்களை சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர்கள் காவல் துணை கண்காணிப்பாளர், வட்டாட்சியர் ஆகியோர் 48 மணி நேரத்திற்கு முன்னதாக விழா நடைபெறும் இடத்தினை தணிக்கை செய்து விழா நடத்த முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்தபின்னரே விழா நடத்த அனுமதிக்கப்பட வேண்டும்.  

எருதுவிடும் நிகழ்ச்சியில் உள்ளுர் எருதுகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அவ்வாறு பங்குபெறும் எருதுகளின் விவரங்களை  கால்நடை பராமரிப்புத் துறையில் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும்.  கால்நடை பராமரிப்புத் துறையினரிடம் பதிவு செய்யப்பட்ட எருதுகளை மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும், வெளியூர்கள் / வெளி மாவட்டம் / வெளி மாநிலத்திலிருந்து வரும் எருதுகள் கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது.   

மேற்கண்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாமல் விழா நடத்தப்பட்டு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படுமாயின் கண்டிப்பாக அத்தகைய கிராமங்களின் பெயர்களை அடுத்த வருடங்களில் எருது விடும் விழா நடத்த அரசிதழில் பிரசுரம் செய்ய பரிந்துரை செய்யப்படமாட்டாது எனவும்,  விழா நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும், விழா குழுவினர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வேலூர் மாவட்டத்தில் எவ்வித அசம்பாவிதங்களுமின்றி எருதுவிடும் விழா நடத்த ஒத்துழைப்பு நல்குமாறு வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதில் ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு உறுப்பினர் எஸ்.கே. மிட்டல் கலந்து கொண்டு  கூறியதாவது, 

வேலூர் மாவட்டத்தில் நடந்த மாடு விடும் விழாக்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டது. இதனால் மாவட்ட நிர்வாகம் மாடு விடும் விழா நடத்த தற்காலிகமாக தடை விதித்தது. இதனை பாராட்டுகிறேன்.

மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி விழாக்குழுவினர், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடு விடும் விழாவில் கலந்து கொள்ளும் பொது மக்கள் தாங்களாக முன்வந்து கட்டுப்பாடுகளுடன் நடந்துகொள்ளவேண்டும்.

மாடு விடும் விழாக்களில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் காயம் அடைந்து வருவதாக செய்திகள் வருகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

ஜாலியாக மாடு விடும் விழா காண வருகிறீர்கள். ஆனால் ஒரு சில உயிரிழப்புகள் ஏற்பட்டு சோகமாக செல்லும் நிலை உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கவலை அளிக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் கொரோனா விதிகளை கடைபிடித்து மாடு விடும் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

மீண்டும் விதிமீறல்கள் ஏற்பட்டால் உச்சநீதிமன்ற உதவியுடன் 2 ஆண்டுகளில் இதுபோன்ற மாடு விடும் விழாக்கள் நடத்த முற்றிலும் தடை விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments