கொடிசியா சிறப்பு சிகிச்சை மையத்தை ஆட்சியர் நேரில் ஆய்வு
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டம், கொடிசியா சிறப்பு சிகிச்சை மையம், அரசு கலை மற்றும் கல்லூரி ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இவ்ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா துணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) மரு.அருணா, மாநகராட்சி நகர் நல அலுவலர் மரு.சதீஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக தற்போது தொற்றுப்பரவல் கட்டுக்குள் உள்ளது.
இருந்தபோதிலும், தற்போது தமிழ்நாட்டில் பரவி வரும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோயைக் கருத்தில் கொண்டு, மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், அரசு வழிகாட்டி நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றுவதை உறுதி செய்யவும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.
அதன்படி, கொடிசியா வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, 'E' ஹாலில், கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கவும், படுக்கை வசதிகள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் அமைக்கவும்,மருத்துவர்களை நியமித்து சுழற்சி முறையில் பணியாற்றிட சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் தன்மைக்கேற்ப அவர்களை மருத்துவமனை, சிறப்பு சிகிச்சை மையம், அனுப்பி வைத்திட ஏதுவாக இராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டுவரும் மாநகராட்சி திருமண மண்டபத்தில் Triage Center அமைத்திடவும், போதியஅளவிலான அலுவலர்களை பணியில் அமர்த்திடவும் அறிவுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சைக்கென்று உள்ள ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய பிரத்யேக கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அக்கட்டிடத்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தினசரி கொரோனா தொடர்பாக பெறப்படும் அழைப்புகள் குறித்தும், அவர்களுக்கு அளிக்கப்படும் தீர்வுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
மேலும், சிறப்பு கட்டளை மையம், சமூக நல உள மையம் ஆகியவற்றிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
No comments
Thank you for your comments