பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமனூர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சூலூர், நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை, இராமநாதபுரம் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை ஆகிய இடங்களில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கும் நிகழ்வை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி. செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ்.பார்த்திபன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மேனகா, மாவட்ட வழங்கல் அலுவலர் எம்.சிவக்குமாரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் மே மாதம் 7-ஆம் தேதி அன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4000/- கொரோனா நிவாரண நிதியாக வழங்க முதல் கையெழுத்திட்டு, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்கள் ரூ.4000/-யை வழங்கினார்கள்.
அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன்கள் தள்ளுபடி என தொடர்ச்சியாக, ஆட்சி பொறுப்பேற்ற 7 மாத காலத்திற்குள்ளாக அடுக்கடுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கி வருகிறார்கள்.
அதனைத்தொடர்ந்து, தமிழர் திருநாள் தைப்பொங்கல் 2022 சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கும் என மொத்தம் 2.15கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88கோடி மதிப்பில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டார்கள்.
அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டத்தில் உள்ள சோமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சூலூர் நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை, இராமநாதபுரம் நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை ஆகிய இடங்களில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
- பச்சரிசி,
- வெல்லம்
- முந்திரி,
- திராட்சை
- ஏலக்காய்,
- பாசிப்பருப்பு,
- நெய்,
- மஞ்சள் தூள்,
- மிளகாய் தூள்,
- மல்லித்தூள்,
- கடுகு,
- சீரகம்,
- மிளகு
- புளி,
- கடலை பருப்பு,
- உளுத்தம் பருப்பு,
- ரவை,
- கோதுமை மாவு,
- உப்பு,
- துணிப்பை,
மாவட்டத்தில் உள்ள 10,78,484 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.58.02கோடி மதிப்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.
இப்பரிசு தொகுப்பினை ஜனவரி-10ஆம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் (இலங்கை அகதிகள் முகாம் உட்பட) செயல்படும் 1250 நியாய விலைக் கடைகள், கருப்பட்டி உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் 19 நியாய விலைக் கடைகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் 105 நியாய விலைக் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 54 நியாய விலைக் கடைகள் என மொத்தம் 1428 நியாய விலை கடைகளின் மூலம் 10,78,484 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
பொதுமக்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். அரசின் இத்திட்டத்தை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சென்று பயன்பெறக்கூடிய வகையில் நியாய விலைக்கடைகளில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள்,பணியாளர்கள், மற்றும் அரசு அலுவலர்கள், ஆகியோரின் இந்த பணி மகத்தான பணி வரவேற்கக்கூடியது. அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக் கடைகளுக்கு ஒரே நேரத்தில் வருவதை தவிர்க்கவும், கொரோனா பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்ற ஏதுவாகவும், பொங்கல் பரிசுத் தொகுப்பினை விநியோகத்திட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்படுகிறது.
அதில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அக்குடும்ப அட்டைதாரர்கள் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பெற்றுக் கொள்ளவேண்டும்.
No comments
Thank you for your comments