பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு விநியோகம் மற்றும் தரம் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் கூட்டுறவு அங்காடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுவருவதை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இவ்ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் ஜி.எஸ்.சமீரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ்.பார்த்திபன், மாவட்ட வழங்கல் அலுவலர் எம்.சிவக்குமாரி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழர் திருநாள் தைப்பொங்கல் 2022 சிறப்பாக கொண்டாடும் வகையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கும் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆணையிட்டார்கள்.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள 1428 நியாய விலை கடைகளின் மூலம் 10,78,484 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், புளி, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்புதுணிப்பை ஆகிய 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களுக்கு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமானதாகவும், சரியான எடையில் உள்ளனவா, அனைத்து பொருட்களும் வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்துடன், அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அக்குடும்ப அட்டைதாரர்கள் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை உரிய நேரத்திலும், தரமான பொருட்களையும், சரியான எடையில் வழங்கிட நியாயவிலைக் ஊழியர்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டார்.
No comments
Thank you for your comments