அலங்கார ஊர்தியினை, கலைப்பண்பாட்டுத் துறையின் நாதஸ்வர இசைநிகழ்ச்சியுடன் வரவேற்பு
ஈரோடு, ஜன.28-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு, அணிவகுப்பில் பங்கேற்ற மூன்று அலங்கார ஊர்திகளை கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் காட்சிப்படுத்தும் பொருட்டு கொடியசைத்து தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள், ஈரோடு மாவட்டம், பவானி காவிரி ஆற்றுப்பாலம் தேசிய நெடுஞ்சாலை அருகில், ஈரோடு மாவட்டத்திற்கான அலங்கார ஊர்தியினை வரவேற்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 26.01.2022 அன்று சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை - குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு, அணிவகுப்பில் பங்கேற்ற மூன்று அலங்கார ஊர்திகளை கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் காட்சிப்படுத்தும் பொருட்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, இன்று (28.01.2022) ஈரோடு மாவட்டம், பவானி காவிரி ஆற்றுப்பாலம் தேசிய நெடுஞ்சாலை அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர். அந்தியூர் ப.செல்வராஜ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இ.திருமகன் ஈ.வெ.ரா., தலைவர், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் குறிஞ்சி.என்.சிவகுமார் ஆகியோர் முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் ஈரோடு மாவட்டத்திற்கான அலங்கார ஊர்தியினை, கலைப்பண்பாட்டுத் துறையின் நாதஸ்வர இசைநிகழ்ச்சியுடன் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
குடியரசு தினத்தில் நம்முடைய இந்திய துணைகண்டத்தின், தலைநகரம் நடத்துகின்ற அலங்கார ஊர்தி ஊர்வலத்தில், தமிழகத்தின் சார்பாக, அலங்கார ஊர்தி கலந்து கொள்ள வேண்டும் என்ற ஏற்பாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செய்தார்கள். பொதுவாக அனைத்து தலைவர்களும் கொண்ட ஒரு அலங்கார ஊர்தி குறிப்பாக தமிழகத்தில் சுதந்திரத்திற்காக போராடி உயிரை விட்ட பல தலைவர்களுக்காக இந்த அலங்கார ஊர்தி ஏற்பாடு செய்யப்பட்டு அது நம்முடைய நாட்டின் தலைநகரத்தில் ஊர்வலமாக வரவேண்டும் என்ற அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டது. அலங்கார ஊர்தியானது, புதுடெல்லியில் குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் இடம் பெறுவதோடு, தமிழ்நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்படும் என்று கடந்த 18.1.2022 அன்று அறிவித்திருந்தார்கள்.
அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் 26.01.2022 அன்று சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மூன்று அலங்கார ஊர்திகளையும் முதற்கட்டமாக, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் காட்சிப்படுத்தப்படுத்தும் பொருட்டு, கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். மேலும், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த அமைச்சர் பெருமக்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த அலங்கார ஊர்திகளை வரவேற்று, பொதுமக்கள் பெருந்திரளாக பார்வையிட்டு பயன்பெறுகின்ற வகையில் நகரின் முக்கியப் பகுதிகளில் இவ்வூர்திகள் காட்சிப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
ஈரோடு மாவட்டத்திற்கான அலங்கார ஊர்தியானது, சத்தியாகிரக அறப்போராட்டம் நடத்தியவரும், சமூக சீர்திருத்தத்திற்காகவும், பெண் விடுதலைக்காகவும் தீண்டாமையை வேரறுக்க அரும் பாடுபட்ட பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று ஒத்துழையாமை இயக்கம், சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட மூதறிஞர் இராஜாஜி, தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் முழங்கிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற்றிட எந்நாளும் உழைத்திட்ட கர்மவீரர் காமராஜர், சமூக சீர்திருத்தச் செயல்பாட்டாளர் ரெட்டைமலை சீனிவாசன், கலெக்டர் ஆஷ் துரையை கொன்று தன்னுயிரை மாய்த்துக் கொண்ட வீரன் வாஞ்சிநாதன், அன்னியர்களை வீரமுடன் எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலை, தீரன் சின்னமலை அவர்களின் படைத்தளபதி மாவீரன் பொல்லான், கொடிகாத்த திருப்பூர் குமரன், விடுதலைக்காக முதன்மை பங்காற்றிய வரும் சிறந்த இலக்கியவாதியுமான திருச்சிராப்பள்ளி வ.வே.சு. ஐயர், அனைவராலும் போற்றப்பட்ட கண்ணியமிகு காயிதேமில்லத், அண்ணல் காந்தியடிகளின் பொருளாதாரப் பேராசிரியராகவும் சிறைத்தண்டனை பெற்றவருமான தஞ்சாவூர் ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா, தியாகச் சீலர் கக்கன் ஆகியோரின் புகழினை வெளிப்படுத்துகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அலங்கார ஊர்தியானது இன்று, ஈரோடு மாவட்ட எல்லையான பவானி ஆற்றுப்பாலத்தில் கலைப்பண்பாட்டு துறையின் நாதஸ்வர இசை நிகழ்ச்சிகளுடன், மிக சிறப்பான முறையில் வரவேற்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, அலங்கார ஊர்தியானது ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு இன்று (28.01.2022) முதல் காட்சிப்படுத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும், ஒவ்வொரு மாவட்டந்தோறும் இந்த அலங்கார ஊர்திகள் சுற்றி வருவதன் மூலம் சுதந்திரத்திற்காக, போராடி இன்னுயிரை தியாகம் செய்த அத்தனை தலைவர்களுக்கும் மிகப்பெரிய ஒரு மரியாதை மக்களிடத்தில் மீண்டும் அவர்களை நினைத்துக் கொள்வதற்கு, அவர்களை மறக்காமல் இருப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. சென்னையில் இருந்து இரவு பகலாக இங்கு வரும் பொழுது இரவு நேரத்தில் கூட மக்கள் பார்க்கின்றார்கள் என்றால் அது அன்றைக்கு சுதந்திரத்திற்காக போராடிய அத்தனை தலைவர்களுக்கும் ஒரு பெருமையை மிக அருமையாக முதலமைச்சர் அவர்கள் வழங்கியுள்ளார்கள். மேலும், அத்தலைவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டியது, அவர்களை பெருமைப்படுத்த வேண்டியது நிச்சயமாக ஒவ்வொரு குடிமகனுடைய கடமை ஆகும்.
எனவே, நமது நாட்டின் விடுதலைக்காக போராடிய விடுதலை போராட்ட வீரர்களின் சிறப்பை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலங்கார ஊர்தியினை பொதுமக்கள் பார்வையிட்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தியானது, ஈரோடு மாவட்ட எல்லையான பவானி ஆற்றுப்பாலத்தில் இருந்து, பெருந்துறை வழியாக, ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தை வந்தடைந்தது.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பெ.பிரேமலதா, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி இளங்கோ, வட்டாட்சியர்கள் பவானி மற்றும் ஈரோடு உட்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments