Breaking News

ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியினர்!

 

ஈரோடு, ஜன.6-

ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுக்கா பகுதியை சேர்ந்த தாண்டாம்பாளையம் கிராமத்தில் வசித்து வரும் ராமசாமி சசிகலா தம்பதியினருக்கு சொந்தமான  நிலத்தில் 2017ஆம் ஆண்டு புதிதாக வீடு கட்டி குடிபுகுந்துள்ளனர்.

அவர்களது வீட்டருகே தோட்டம் வைத்துள்ள குருசாமி என்பவர், அவரது  நிலத்தில் இரண்டு அடியை சேர்த்து  வீடு கட்டி விட்டதாகவும் அதனை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும்  கூறி வந்துள்ளார்.

இதனையடுத்து ராமசாமி சசிகலா தம்பதியினர் கடந்த நான்கு ஆண்டுகளாக பல்வேறு அதிகாரிகளி டத்தில் நிலத்தை அளந்து தருமாறும் புதிதாக கட்டியுள்ள வீட்டை இடிக்க இயலாது என்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று (05.01.2022) ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த ராமசாமி சசிகலா தம்பதியினர்  கலெக்டர் கிருஷ்ணனுண்ணி  தனது காரில் ஏறி புறப்படும் சமயம் பார்த்து  தாங்கள் மறைத்து கொண்டு வந்து வைத்திருந்த மண்ணெண்ணெய் தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

கலெக்டரின் பாதுகாவலர் உடனடியாக விரைந்து சென்று மண்ணெண்ணெய் கேனை தட்டிவிட்டு அவர்கள் தீக்குளிக்க முயற்சித்ததை தடுத்து  காப்பாற்றினர்.

உடனடியாக காரில் இருந்து இறங்கிய மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி அந்த  தம்பதியினரை கண்டித்தார்.  மேலும் அவர்களின்  கோரிக்கையை  எழுத்து மூலமாக கொண்டு வந்து தன்னிடம் கொடுக்குமாறும்,  இது குறித்து அதிகாரிகளிடத்தில் தகுந்த  நடவடிக்கையை உடனே  எடுக்குமாறும் உத்தரவிட்டார். மேலும்  இதுபோன்ற தகாத  செயல்களில் ஈடுபட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி அவர்களுக்கு மாற்று உடைகள்   வழங்க ஏற்பாடு செய்தார்.

இதுகுறித்து ஈரோடு காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  நிலப் பிரச்சனை காரணமாக மாவட்ட ஆட்சியர் கண்முன்பே தம்பதியினர் தீக்குளிக்க முயன்ற சம்பவம்  அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments

Thank you for your comments