Breaking News

எருது விடும் விழா... அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அசம்பாவிதம் ஏற்படாவண்ணம் ஒத்துழைப்பு நல்க ஆட்சியர் வேண்டுகோள்!

வேலூர், ஜன.12-

வேலூர் மாவட்டத்தில், 2022-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நடத்தப்பட உள்ள கிராமங்கள் ஆன்லைன் மூலமாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  இந்த விண்ணப்பங்கள் மீது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் சம்மந்தப்பட்ட எருது விடும் விழா நடத்தும் பொறுப்பாளர்களுடன்  28.12.2021 அன்று கலந்தாலோசித்து எருதுவிடும் விழா நடத்தும் தேதிகள் உறுதிசெய்யப்பட்டு அரசு ஆணை பெறும் பொருட்டு அரசுக்கு பிரேரனை அனுப்பப்பட்டுள்ளது.  தற்போது  அரசாணை (நிலை) எண்.27 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் (பே.மே4) துறை, நாள்:10.01.2022ன்படி கொரோனா தொற்று காரணமாக எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் ஜல்லிகட்டு/மாடு விரட்டு/எருதுவிடும் நிகழ்ச்சியினை கீழ்கண்ட நிபந்தனைகளுடன் நடத்த தமிழ்நாடு அரசு அனுமதித்து ஆணையிட்டுள்ளது.    

1. எருதுவிடும் நிகழ்ச்சிகளில் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களும் பெரும் பங்கு வகிப்பதால், ஒரு காளையுடன் சுமார் 5 முதல் 6 நபர்கள் வருவது வழக்கம்.  தெனை கட்டுப்படுத்தி ஒரு காளையுடன் ஒரு உரிமையாளர் மற்றும் காளையுடன் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர், ரெண்டு டோஸ் கொரானா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை (ஸிஜி-றிசிஸி ஜிமீst)  என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.  காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். மேலும், அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கு எருதுவிடும் நிகழ்ச்சி நடைபெறும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. அவர்களுக்கான அடையாள அட்டை சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

2. காளையின் உரிமையாளர் மற்றும் உடன் வரும் நபர்கள் கண்டிப்பாக கோவிட்-19 பரிசோதனை செய்து, தொற்று இல்லை என சான்று பெற்றிருக்க வேண்டும். மேற்படி தொற்றில்லை என்ற சான்று வட்டாட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பித்த பின்னரே அடையாள அட்டை வழங்கப்படும்.

3. காளைகளை பதிவு செய்யும்போது அக்காளையின் உரிமையாளர் மற்றும் உடன்வரும் உதவியாளர் ஆகியோரும் பதிவு செய்தல் வேண்டும்.  எருதுவிடும் நிகழ்ச்சியில் பங்குபெறும் காளைகளின் பதிவு, நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பே முழக்கப்பட வேண்டும்.



4. எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்துக்கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

5. எருது விடும் நிகழ்ச்சியில் பங்குபெறும் வீரர்களுக்கு, ரெண்டு டோஸ் கொரானா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள்  கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்று பெறப்பட்டவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

6. தமிழ்நாடு அரசினால் வெளியிடப்படும் கொரானா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி பார்வையாளர்கள், திறந்த வெளி அரங்கின் அளவிற்கேற்ப   சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதிகபட்சமாக 150 பார்வையாளர்கள் அல்லது அனுமதிக்கப்பட்ட இருக்கை எண்ணிக்கையில்  50 சதவிகிதத்திற்கு மிகாமல் வெற்றில் எது குறைவோ அந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.  பார்வையாளர்கள் ரெண்டு டோஸ் கொரானா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை  என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

7. எருதுவிடும் நிகழ்ச்சியை மேற்பார்வை செய்யும் அனைத்துத் துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் ரெண்டு டோஸ் கொரானா தடுப்பூசி போட்டதற்கான சான்று மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 2 நாட்களுக்குள் கோவிட் தொற்று இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும்.

8. அனைத்து துறை அலுவலர்களும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், பார்வையாளர்களும் மற்றும் ஊடகத் துறை சார்ந்தவர்களும் அரசினால் அறிவுறுத்தப்பட்ட நடைமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.

9. எருதுவிடும் நிகழ்ச்சிகள் நடத்த அரசின் முன் அனுமதி பெற்று பிராணிகள் வதை தடுப்பு (ஜல்லிகட்டு நெறிமுறைகள்) விதிகள், 2017, அரசினால் வெளியிடப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றுடன் அரசினால் விதிக்கப்படும் கொரானா தடுப்பு கட்டுப்பாடுகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும்.

10. வேலூர் மாவட்ட நிர்வாகத்தால் முடிவெடுத்தவாறு விழாவில் பங்குபெறும் விழா குழுவினர் முன்னெச்சரிக்கையாக காப்பு நிதி   ரூ.10,000/-ஐ மாவட்ட ஆட்சித் தலைவர், வேலூர் என்ற பெயரில் இந்தியன் வங்கியில் மாற்றத் தக்க வகையில் வரைவோலை    எடுத்து சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

11. எருது விடும் விழா மொத்த நிகழ்ச்சியும் காப்பீடு செய்யப்பட்டு அதற்கான ஆவணத்தை விழா குழுவினர் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.  சென்ற ஆண்டு ரூ.1 கோடி மதிப்பிற்கு காப்பீடு செய்வதற்கான பிரிமியம் தொகையாக  ரூ.11840/-ம், எருதுகளுக்கு ரூ.75000- மதிப்பிற்கு காப்பீடு செய்ய ரூ.3611/- பிரிமியம் தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.  மேற்படி காப்பீட்டின் மூலம் எருது விடும் விழாக்களில் ஏற்படும் மனித உயிர் இழப்பிற்கு ரூ.5,00,000/-ம், எருது உயிர் இழப்பிற்கு ரூ.75,000/-ம் இழப்பீடாக வழங்க இயலும்.  மேற்படி எருதுவிடும் விழா மொத்த நிகழ்ச்சிக்கான காப்பீட்டினை எருது விடும் விழாவினை நடத்தும் விழா குழுவினரும் மற்றும் அதில் பங்கேற்க உள்ள எருதுகளின் உரிமையாளர்களும் வேலூரில் “தி ஓரியண்டல் இன்சுரன்ஸ் கம்பெனி லிமிடெட், ஜம்பு பாலா காம்ப்ளக்ஸ், முதல் தளம், 238, ஆற்காடு ரோடு, வேலூர்-632 003” என்ற முகவரியில் உள்ள நிறுவனத்தின் கிளையினை அணுகி காப்பீடு செய்யப்பட வேண்டும். எருதுகளுக்கான காப்பீடு செய்வது தொடர்பாக எருதுகளின் முழு அளவு புகைப்படம், கால்நடை மருத்துவரால் அங்க அடையாளத்துடன் வழங்கப்பட்ட உடல் தகுதிச் சான்று, உரிமையாளரது புகைப்படம், உரிமையாளரது ஆதார் அடையாள அட்டை மற்றும்  காப்பீட்டு நிறுவனத்தின் தெர விதிமுறைகளின்படி காப்பீடு செய்து கொள்ள வேண்டும். (அலுவலக தொலைபேசி 0416-226651).

 12. எருதுவிடும் நிகழ்ச்சிகள் அரசின் வழிகாட்டுதல்படி நடத்தப்படும் என்பதற்கான உத்தரவாத பத்திரம் மற்றும் எருதுவிடும் நிகழ்ச்சியின்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு தாங்களே முழு பொறுப்பு என்பதற்கான உத்தரவாத பத்திரம் ஆகியனவற்றை எருதுவிடும் விழா நடத்தும் விழா குழுவினர் சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

13. எருதுவிடும் விழாவில் பார்வையாளர்களாக பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். 

14. விழாவில் பங்குபெறும் காளைகளை முன்கூட்டியே கால்நடை பராமரிப்புத் துறையினருடன் ஒருங்கிணைந்து பரிசோதனை செய்து தகுதிச் சான்று பெற்றிருக்க வேண்டும்.

 15. விழா நடைபெறும் இடத்திலிருந்து 5 கி.மீ சுற்றளவில் திறந்தவெளி கிணறுகள்  உள்ளனவா என்பதை ஆராய்ந்து அவற்றை மூடுவதற்கு ஏற்பாடு செய்தும், ரயில்வே தண்டவாளங்கள், எரிவாயு கிடங்குகள், பெட்ரோல் பங்க், மின்மாற்றிகள், சாலையின் குறுக்காக செல்லும் ஒயர்கள் எதுவும் இல்லை என்பதையும் விழா குழுவினர் உறுதி செய்ய வேண்டும்.

16. விழா நடைபெறும் திடலின் இருமருங்கிலும் பார்வையாளர் அரங்கத்தை பிரிக்கும் வகையில் ரெட்டை தடுப்பான்கள் உறுதியாக அமைக்கப்பட வேண்டும்.

17. எருதுவிடும் விழா நிகழ்ச்சி முழுவதையும் 100% சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட வேண்டும்.

18. அரசால் அறிவிக்கப்படும் முழு ஊரடங்கு காலங்களில் எருதுவிடும் நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது.

19. 14.01.2022 முதல் 18.01.2022 வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

 20. எருதுவிடும் நிகழ்ச்சி காலை 11.00 மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் 03.00 மணிக்குள் முடிக்கப்பட வேண்டும்.

21. தமிழ்நாடு அரசினால் வெளியிடப்படும் கொரானா தடுப்பு நடவடிக்கை நடைமுறைகளை பார்வையாளர்கள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.  இதனை மீறுபவர்கள் உடனுக்குடன் எருதுவிடும் விழா வளாகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

22. 16.01.2022 அன்று ஞாயிறு  முழு ஊரடங்கு என்பதால் எருது விடும் விழா நடத்த அனுமதிக்க இயலாது.

  எனவே, மேற்கண்ட அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எவ்வித அசம்பாவித நிகழ்வுகளும் ஏற்படாவண்ணம் ஒத்துழைப்பு நல்க மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன், கேட்டுக்கொள்கிறார்.

No comments

Thank you for your comments