பத்திரப்பதிவுத்துறையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திட்டத்தினை செயல்படுத்திய முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி
மதுரை:
மதுரை மாவட்டம் பொதுமக்களின் குறைகளை களையும் விதமாக சிறப்பான திட்டமான பத்திரப்பதிவுத்துறையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் என்ற திட்டத்தினை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மதுரை மாவட்ட பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்..
பொதுமக்களின் தேவைகளுக்கேற்ப சேவையாற்றும் துறையாக, பதிவுத்துறையை மாற்றியமைக்குமாறு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்திரவிட்டதற்கிணங்க, களநிலையை அறிந்து கொள்வதற்காக அனைத்து மண்டலங்களிலும் உள்ள பல சார்பதிவாளர் அலுவலகங்களை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க வகையறியாது அலைவதையும், பதிவு அலுவலகங்களில் அவர்கள் நடத்தப்பட்ட விதத்தையும் அறிந்ததன் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் பதிவுத்துறையின் நடைமுறைகளில் கொண்டு வரப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பதவியேற்றவுடன் விடிவு காலம் வந்துவிட்டது என்று கருதி தங்களின் சொத்துக்களை திரும்பப் பெற்று விடலாம் என்ற எதிர்பார்ப்போடு பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து மனுக்களை அனுப்பி வருகின்றனர். கடந்த ஆட்சியின் போது பல வகையினாலும் சொத்தை இழந்து பரிதவித்து, செய்யும் வழிவகை அறியாது, அங்கும் இங்கும் அலைந்து திரியும் பொதுமக்களின் துயர் துடைக்கும் நோக்கில் இத்தவறுகளை நேர் செய்யும் விதமாக, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக ஊக்கம் தந்து கொண்டிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில் சொத்துக்களின் உண்மையான உரியாமையாளர்களிடம் அவர்களது சொத்துக்கள் மீட்கப்பட்டு ஒப்படைக்க வழிவகை செய்யப்பட்டு வருகின்றன.
2021-2022-ஆம் ஆண்டு முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு மானியக்கோரிக்கையின் போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட ”திங்கட்கிழமை தோறும் பதிவு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படும்” என்ற அறிவிப்பினை வெற்றிகரமாக செயல்படுத்தும் விதமாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ராஜகம்பீரத்தில் உள்ள மதுரை மண்டல துணைப்பதிவுத் துறைத் தலைவர் அலுவலகத்தில்
2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் துவக்கி வைத்தார். அவ்வாறே, மேற்படி பதிவு குறைதீர்க்கும் முகாம்கள் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணைப்பதிவுத்தலைவர் மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் முறையே நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணைப்பதிவுத்தலைவர் மற்றும் மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் துவங்கி வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை பதிவு குறைதீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் அந்தந்த பதிவுத்துறை அலுவலக எல்லைக்குட்பட்ட பதிவு அலுவலகங்களை பொறுத்து பத்திரப்பதிவ, திருமணப்பதிவு, வில்லங்க சான்று மற்றும் பதிவுத்துறை தொடர்பான பிற புகார்கள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக அளித்து உரிய தீர்வுகளை விரைவாக பெற்று வருகின்றனர்.
முகாம் நடைபெறும் இடங்களில் முகாம் அலுவலர், பிற துணை அலுவலர்கள், பணியாளர்கள், தகவல் தொகுப்பு பணியாளர்கள் ஆகியோர் அனைவரும் தத்தமது முகாம் அலுவலகங்களில் முன்னரே வந்து தயாராக இருக்க வேண்டும் என்றும், முகாம் காலை 10.00 மணி முதல் பிறபகல் 1.00 மணி வரை செயல்படுவதை முகாம் அலுவலர் உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், பிறபகல் 1.00 மணியளவில் முகாமிற்கு வந்து காத்து கொண்டிருக்கும் அனைத்து மனுதாரர்களிடமிருந்து அனைத்து மனுக்களும் கட்டாயம் பெறப்பட வேண்டும் என்றும், முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மகளிர்க்கு முன்னுரிமை அளித்து மனுக்களை பதிவு செய்யப்பட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட பதிவுத்துறை அலுவலகங்களில் கடந்த 10.11.2021 நாள் முதல் தற்போது வரை நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டம் மூலம் மொத்தம் 248 மனுக்கள் பெறப்பெற்று 118 மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வுகாணப்பட்டுள்ளது. மேலும், 130 மனுக்களின் மீதான விசாரணை மற்றும் நடவடிக்கைகள் விரைவாக செயல்படுத்தப்பட்டு தீர்வு காணப்படவுள்ளது.
இத்திட்டதின் கீழ் பயனடைந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த சீதாராமன் அவர்கள் தெரிவிக்கையில்:-
தமிழக வரலாற்றிலேயே பத்திரப்பதிவுத்துறை ஆரம்பித்தநாள் முதல் இன்று வரை மக்களின் குறைகள் ஏதும் கேட்கப்படவில்லை. தற்போது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பத்திரபதிவுத்துறையில் குறைதீர்க்கும் நாள்கூட்டம் மாதந்தோறும் திங்கட்கிழமையன்று நடத்தப்பட வேண்டும் உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், மதுரை மாவட்டம், ஒத்தக்கடை பத்திரப்பதிவு அலுவலகத்தில் முதன்முறையாக மக்களிடம்குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் பத்திரப்பதிவுத்துறையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க வகையறியாது அலைவதையும், பதிவு அலுவலகங்களில் அவர்கள் நடத்தப்பட்ட விதத்தையும் கருத்திற் கொண்டு தமிழ்நாடு அரசால் இக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. எனவே, மக்களின் மத்தியில் இத்திட்டமானது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, இத்திட்டத்தினை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலோடு செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சீர்திருத்த திட்டங்களால் வணிகவரி மற்றும் பதிவுத்துறைகளின் பொற்கால விடியல் நிகழ ஆரம்பித்துள்ளது என்பதை பொதுமக்கள் உணர தொடங்கியுள்ளனர்.
தொகுப்பு :
இ.சாலிதளபதி, செய்திமக்கள்தொடர்பு அலுவலர், மதுரை.
வா.பெ.வினோத், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி), மதுரை.
No comments
Thank you for your comments