Breaking News

டாக்டர்.அம்பேத்கர் சிலை திறப்பு

ஈரோடு, ஜன.28-

ஈரோட்டில் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் சிலைகளின் அருகே டாக்டர்.அம்பேத்கருக்கு சிலை திறக்கப்பட்டது...

தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் பெரியார் சிலை அருகே தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களுக்காக குரல் கொடுத்த உன்னத தலைவரும் சட்டமேதையுமான  டாக்டர்.அம்பேத்கருக்கு சிலை அமைக்க வலியுறுத்தி, கடந்த ஆட்சிகளில் பல அரசியல் கட்சிகள், 32 தலித் அமைப்பினர்   திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தனர்.

முன்னதாக  தேர்தல் பிரச்சாரத்திற்கு ஈரோடு வந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில்  அமைந்துள்ள தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் சிலைகளின் அருகில்  புரட்சியாளர் அம்பேத்கருக்கும் திமுக சார்பில் சிலை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

 ஈரோட்டில் அம்பேத்கர் சிலை வைக்க, சென்ற 22ம் தேதி தமிழக அரசு சார்பில் முறையாக அனுமதியும் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து  இந்திய குடியரசு தினமான ஜனவரி 26 அன்று  இந்தியாவின் சட்டமேதையான அம்பேத்கரின் சிலையை, திராவிட இயக்கத்தின் குருகுலமான ஈரோட்டில்  பகுத்தறிவு தந்தை பெரியார் சிலை அருகே அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது.

இந்த அம்பேத்கர் சிலையை  சென்னையிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  காணொளி காட்சி மூலமாக திறப்பு விழா செய்து வைத்தார். 

அதன் பின்னர்  அம்பேத்கர் சிலைக்கு வீட்டுவசதித்துறை அமைச்சர்   சு. முத்துசாமி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி சிவக்குமார், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இ. திருமகன் ஈவெரா மற்றும் பல அரசியல் கட்சிகள்,  தலித் அமைப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments