தேர்தல் விதிமீறல் நடந்தால் உடனடி நடவடிக்கை..!
வேலூர், ஜன.28-
தேர்தல் விதிமீறல் நடந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு ஆணையர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் தலைமையில் நடந்தது. இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தேர்தல் பணிகள் ஒதுக்கப்பட்டது.
கூட்டத்தில் ஆணையர் அசோக்குமார் பேசியதாவது, தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் சரியாக பணியாற்ற வேண்டும். மனுக்கள் பெறுபோதும், பரிசீலனையின் போதும் முறையாக பணியாற்ற வேண்டும். மனு தாக்கல் செய்ய அதிகளவில் நபர்கள் வந்தால் அவர்களுக்கு டோக்கன் வழங்கி அதன் அடிப்படையில் மனுக்களைப் பெற வேண்டும்.எந்த வித தடையின்றி மனுக்களை பெற வேண்டும்.
மனுக்கள் பரிசீலனையின்போது தேர்தல் விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை அனைவரும் முழுமையாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
தேர்தல் ஆணைய விதிகளின்படி பணி செய்தால் சிறு தவறு இல்லாமல் தேர்தல் நடத்த முடியும். வேட்புமனு சரிபார்ப்பு பணி நடைபெறும் அன்று மாலை ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுதாரர்களின் பெயர் பட்டியலை அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் ஒட்டப்படவேண்டும். தினந்தோறும் பெறப்படும் மனுக்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணைய ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் போது முறையான பட்டியலை தயாரித்துக்கொள்ள வேண்டும்.
மாநகராட்சிப் பகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.இதனால் தேர்தல் விதி மீறல் சம்பந்தமான புகார்கள் வந்த உடனேயே அதற்கு தீர்வு காண வேண்டும். அனைத்து அதிகாரிகள் தேர்தல் பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் வேலூர் மாநகராட்சி முன்மாதிரியாகக் திகழும். மாநகராட்சி பகுதியில் தேர்தல் விதி மீறல்கள் குறித்து குழுக்கள் அமைத்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலுக்கு 437 வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்து கூடுதல் வசதிகளும் செய்யப்பட உள்ளது.
வாக்கு பதிவுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் தயாராக உள்ளது. மாநகராட்சி தேர்தலில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர் அவர்களுக்கு தேர்தல் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments
Thank you for your comments