Breaking News

பொங்கலுக்கு பின்னர் முழு ஊரடங்கா? - அமைச்சர் மா.சுப்ரமணியன் பதில்...

சென்னை :

தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொங்கலுக்கு பின்னர் தொடர்ச்சியாக முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் இன்று (11-1-2022) சென்னையில் தெரிவித்துள்ளார்.

திருவான்மியூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் (Pulse oxymeter) கருவியை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று வழங்கினார். 

அப்போது, சென்னை பெரு மாநகராட்சி சார்பில் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

பின்னர், அடையாறு மண்டல அலுவலகத்தில் உள்ள சரவணா ஆலோசனை மையத்தையும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா. சுப்ரமணியன் கூறியதாவது,

தமிழகத்தில் தினசரி 2000 கொரோனா பாதிப்புகள் அதிகமாக வருகிறது. ஆனால், பாதிக்கப்படுபவர்களுக்கு மிதமான தொற்று இருப்பதால் அவர்களை ஐ.சி.எம்.ஆர். ஆலோசனைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி வருகிறோம்.

வீட்டில் தனிமையில் இருப்பவர்கள் காலை மாலை பல்ஸ் ஆக்ஸ்மீட்டரில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். 92 என்ற புள்ளிக்கு கீழ் வந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

சென்னையில் 26,000 பேர் இப்போது கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.  இதில் சுமார் 21,987 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.

இணை நோய் உள்ளவர்கள், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு வரலாம். கொரோனா தொற்றின் லேசான அறிகுறிகள் இருப்பவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளலாம்.

11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு

நாளைய தினம் (12-1-2022) பிரதமர் மோடியும், முதலமைச்சரும்  தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்க உள்ளனர்.

டெல்லியில் இருந்து பிரதமர் காணொலி மூலம் மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைப்பார்.

11 மருத்துவக் கல்லூரிகளில் 1,450 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

தொடர்ச்சியாக முழு ஊரடங்கு இருக்காது

ஒமைக்ரான் தொற்று குறித்து பரிசோதனை இப்போது செய்யப்படவில்லை. 



இப்போது வரும் பாதிப்பு எல்லாமே எஸ் ஜீன் பாதிப்பு தான், ஒமைக்ரான் அறிகுறிதான் என்பதால் தனியாக ஒமைக்ரான் பரிசோதனை செய்யப்படுவதில்லை.

மக்களின் வாழ்வாதாரம், பாதிக்கப்படக் கூடாது என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். அதனால் கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தீவிரமாக ஆலோசித்து முடிவு எடுக்கிறார்.

மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் வராது.

மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பொங்கலுக்கு பின்னர் தொடர்ச்சியாக முழு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பில்லை .

இவ்வாறு,  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்  செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

No comments

Thank you for your comments