Breaking News

"இல்லம் தேடிக் கல்வித் திட்டம்" தொடங்கி வைத்தார் அமைச்சர் துரைமுருகன்

வேலூர், ஜன.4-

தமிழக முதல்வர் அவர்கள் அறிமுகப்படுத்திய "இல்லம் தேடிக் கல்வித் திட்டம்" - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - வேலூர் மாவட்டத்தில்  நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள்  1254  குடியிருப்புகளில் இல்லம் தேடிக் கல்வி மையங்களை  03.01.2022 அன்று தொடங்கி வைத்தார்.


கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிமுகப்படுத்திய "இல்லம் தேடிக் கல்வித் திட்டம்",  வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் பிரம்மபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இல்லம் தேடி கல்வி மையங்கள் திறப்பு விழா  நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் தலைமையிலும், வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் முன்னிலையிலும் நடைப்பெற்றது. 

இவ்விழாவில் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது, 

மாணவ மாணவிகளுக்கு இல்லம் தேடி கல்வித் திட்டம் என்ற புதிய சித்தாந்தத்தை நம்முடைய முதல்வர் அவர்கள் உருவாக்கி உள்ளார்கள்.இந்த திட்டம் நம்முடைய மாவட்டத்தில் பல இடங்களில் நடப்பதற்கு ஒரு ஆரம்ப நிலையாக  காட்பாடி தொகுதியில் இத்திட்டத்தை கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்.  எனவே இவர்களுக்கு தொகுதியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருகாலத்தில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது அல்லது அனுப்புவது கூட சிலருக்கு முடியாத நிலையாக இருந்தது. 

ஏதாவது ஒரு தொழிலை செய்தால் போதும் என இளஞ்சிறார்களை பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்தி விட்டார்கள்.ஆனால் தற்போது கல்வியின் வளர்ச்சி வந்த போது கட்டாயமாக பள்ளிக்கு செல்வதற்கான சூழ்நிலையை உருவாக்க வேண்டும். 1919 க்கு முன்னால் நீதிக்கட்சியானது சென்னை மாநகரத்தின் மேயர் பதவியை கைப்பற்றினார்கள். வெள்ளுடை வேந்தர் திரு.தியாகராயசெட்டி அவர்கள் ஒரு பிள்ளையை பார்த்து நீங்கள் ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என்று கேட்டார்கள். அதில் ஒரு பையன் எங்களது ஆடுகளை  யாரு மேய்ப்பது?  எங்களுக்கு யாரு சோறு போடுவது? என்று கேட்டான். சோறுபோட்டால் பள்ளிக்கு செல்வாயா என்று கேட்ட பிறகு தான் ஆசிரியர்கள் விவசாய நிலத்திற்கு சென்று அரிசி, நெல்லை வாங்கி வந்து உணவாக போட்டார்கள். 

பிறகு மதிப்பிற்குரிய புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் பள்ளி குழந்தைகளுக்கு உணவை அளித்தார்கள். பெயர் சத்துணவாக உள்ளதை விட உணவில் சத்து இல்லை என்று கருதி ஒரு முட்டைக்கு இரண்டு முட்டைகளாக போட்டார்கள். மேலும் இவை அனைத்தும் படிக்காமலே உணவின் காரணமாகவோ அல்லது வசதியில்லாத காரணமாகவோ பிள்ளைகள்   பள்ளிக்கு வரவேண்டும் என்பதற்காக தான். ஆக யார் ஆட்சி செய்தாலும் மக்களுக்கு நல்லதே செய்கின்றனர். 

அவற்றை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டியது மக்களுடைய கடமை. இவற்றையும் மீறி பலபேர் பள்ளிக்கு செல்வதில்லை.   7,8 வயதுடைய குழந்தைகள் தெருக்களில் டீக்கடையில் கிளாஸ் கழுவுவதை நான் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட பிள்ளைகளை தெருவில் நிறுத்தி உட்கார வைத்து பள்ளி குழந்தைகளுக்கு பாடம் சொல்கிற ஒரு திட்டம் தான் இல்லம் தேடி கல்வித் திட்டம்.  இத்திட்டத்தால் பயனடைபவர்கள் மாணவர்கள் தான். 

இவற்றில் நாட்டமுடையவர்கள், பொது நலனில்  அக்கறையுடையவர்கள் குறைந்த  ஊதியத்தில் மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று வருகிறார்கள். இவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர்  அவர்கள் தெரிவித்தார்.

இவ்விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.முனிசாமி அவர்கள், மாவட்ட கல்வி அலுவலர் திரு.சம்பத், காட்பாடி ஒன்றிய குழு தலைவர் திரு.வேல்முருகன், மாவட்ட அமைப்பாளர் (பள்ளி கல்வித்துறை) திரு.ஜெனார்த்தனன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர்.










No comments

Thank you for your comments