ரூ.120 கோடி கடன் பாக்கி! - ஜப்தி செய்யப்பட்ட பிரைம் சரவணா ஸ்டோர்ஸ்
சென்னை, ஜன.20-
தமிழகத்தில் உள்ள பிரபலமான ஜவுளிக் கடைகளில் ஒன்று சரவணா ஸ்டோர். இவர்களுக்கான முக்கிய வியாபார இடமாக இருந்து வருவது சென்னை தியாகராய நகர். அங்கே உள்ள ரங்க நாதன் தெருவில் பிரைம் சரவணா ஸ்டோர் எனும் துணிக்கடை ஒன்றை இந்தியன் வங்கி அலுவலர்கள் ஜப்தி செய்து கடைக்கு சீல் வைத்துள்ளனர்.
இந்தியன் வங்கி சார்பில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தக் கோரி, பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்குப் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இருந்தபோதும், அந்த நிறுவனம் சார்பில் கடன் தொகை செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இந்தியன் வங்கி இந்த விவகாரத்தை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்காக தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போதும் அந்த நிறுவனம் பணம் செலுத்தத் தவறியுள்ளது.
ரங்கநாதன் தெரு மற்றும் உஸ்மான் சாலையில் உள்ள பிரைம் சரவணா ஸ்டோரின் துணிக்கடை மற்றும் நகைக் கடையை வங்கி அதிகாரிகள், நீதிமன்ற அலுவலர்கள் முன்னிலையில் ஜப்தி செய்து சீல் வைத்தனர். கடையை ஜப்தி செய்ததற்கு அந்த நிறுவனத்தினர் முழு ஒத்துழைப்பு வழங்கியதாகக் கூறப்படுகிறது.
கடைகள் ஜப்தி செய்யப்பட்டதினால் இந்த நிறுவனங்களில் வேலை பார்த்த ஊழியர்களின் நிலை என்ன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. மேலும், கடை வளாகம் ஜப்தி செய்யும்போது பெருமளவு காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டதால் அந்த இடம் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டது.
No comments
Thank you for your comments