Breaking News

வேலூர் வட்டார போக்குவரத்து துறையில் விலைபோகும் அதிகாரிகள்!

வேலூர், ஜன.20-

வேலூர் வட்டார போக்குவரத்து துறையில் போக்குவரத்து உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை..  விதிமுறைகள் மீறி விலைபோகின்றனர் சில அதிகாரிகள் என்ற தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன...

வேலூர் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம் சத்துவாச்சாரி பேஸ்&2ல் செயல்படுகிறது. வேலூர் வட்டாரப்போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்கள், ஆந்திரா எல்லையில் காட்பாடி மற்றும் சேர்காடு பகுதிகளில் இரு சோதனை சாவடிகளும் இயங்குகின்றன. 

மேலும் வேலூர் வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தில் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்றும் நடத்துநர் உரிமம் போன்றவை வழங்குதல். இயங்கு ஊர்திகளின், பதிவு மற்றும் புதுப்பித்தல் சான்று வழங்குதல். தகுதிச் சான்று வழங்கல் மற்றும் தகுதிச் சான்று புதுப்பித்தல் போன்றவை....  லாரிகளுக்கு தேசிய அனுமதி, சரக்கு வாகன அனுமதி, ஒப்பந்த ஊர்தி அனுமதி (சுற்றுலா ஊர்தி, வாடகை ஊர்தி, ஆட்டோ ரிக்ஷா, ஷேர் ஆட்டோ போன்றவை), கல்வி நிறுவன பேருந்துகள், தனியார் பணி வாகனங்கள், போன்றவைகளுக்கு அனுமதி வழங்குதல்...

சாலை பாதுகாப்பு மற்றும் இதர குற்றங்கள் தொடர்பாக அனைத்து வகை போக்குவரத்து வாகனங்களையும் ஆய்வு செய்தல் மற்றும் உரிய அபராதம் வசூலித்தல்.  அபாயகரமாக விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநர்கள், அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள், செல்போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்களின் மீது நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன...

இவ்வலுவலகங்களின் கட்டுப்பாட்டில் சுமார் 40,000க்கு மேற்பட்ட போக்குவரத்து வாகனங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 5,000 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. மேலும் ஒரு மாதத்தில் சுமார் 3,000 ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன. மேற்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டிடத்திலேயே ஓட்டுநர் தேர்வுத் தளம் கட்டப்பட்டுள்ளது. அதில் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் நபர்களுக்கு முறையாக தேர்வு நடத்தி தகுதியுள்ளவர்களுக்கு ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இவ்வாறு நடைபெறும் ஒவ்வொரு பணிகளிலும் அரசு கட்டணம் போக,  தனி கட்டணம் வகுத்து நிர்ணயித்து சில அதிகாரிகள் வசூலிக்கின்றனர் என்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

இதுகுறித்து பொதுமக்களும், பாதிக்கப்பட்டவர்களும் பக்கம் பக்கமாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்... அவர்கள் இடும் பட்டியலை பார்ப்போம்...

தகுதிச் சான்று

பொதுபயன்பாட்டு வாகனங்கள் குறிப்பிட்ட காலஇடைவெளியில் தவறாமல் வாகன சோதனையிட்டு வாகன தகுதி சான்றிதழ் (Vehicle Fitness Certificate)  பெறவேண்டும்..  அதாவது,  லாரிகள், சரக்கு வாகனங்கள்,  கனரக வாகனங்கள், ஒப்பந்த ஊர்திகள் (சுற்றுலா ஊர்தி, வாடகை ஊர்தி, ஆட்டோ ரிக்சா, ஷேர் ஆட்டோ போன்றவை), கல்வி நிறுவன பேருந்துகள், தனியார் பணி வாகனங்கள் என பலதரப்பட்ட வாகனங்கள் வாகன தகுதி சான்றுக்கு வருகின்றன... 

அவ்வாறு வாகன சோதனைக்கு வரும் வாகனங்கள் பழுதடையாமலும், சுற்று சூழல் மாசு ஏற்படுத்தாமலும் விதிமுறைகளின்படி இருத்தல் வேண்டும்... அவ்வாறு முறையான பராமரிப்புடன் பழுது நீக்கப்பட்டு தகுதி சான்றிதழ் விதிமுறைகளுக்குட்பட்டு இருக்கின்றனவா என்று பரிசோதித்து பின்னர்  வாகன தகுதி சான்றிதழ்   வழங்கப்படவேண்டும்... 

அவ்வாறு வரும் வாகனங்களுக்கு அரசு கட்டணம் போக, வாகன வகைகள் தரம் பிரித்து மறைமுகமாக தனி கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சுமார் ரூ.2000 முதல் ரூ.10 ஆயிரம் வரை வசூலிக்கின்றார்களாம்...

அதேபோன்று, வாகனங்கள் முறையான பராமரிப்பு இல்லாமலும், பழுதடைந்த வாகனங்களுக்கும் வாகன தகுதி சான்றிதழ் வழங்கப்படுவதாகவும் விதிமுறைகளை மறந்து அதிகாரிகள் விலைபோகின்றனர்... என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது... வாகன பழுதால் ஆங்காங்கே நடைபெறும் விபத்துகளே இதற்கு சாட்சியாகின்றது... என்பதே நிதர்சனம்...

புதிய வாகனங்கள் பதிவு 

இதேபோன்று புதிய வாகனங்கள் பதிவு செய்வதிலும் தனி விதிமுறைகளை வகுத்து வாகன பதிவு நடைபெறுகிறது... குறிப்பாக இருசக்கர வாகனம், ஆட்டோ, நான்கு சக்கர வாகனம் என ஒவ்வொரு வாகனத்துக்கும் குறிப்பிட்ட அரசு கட்டணம் போக, தனி கட்டணம் நிர்ணயித்து வாகன ஷோரூம் விற்பனை பிரதிநிதிகளிடம் மொத்தமாக வசூலிப்பதாகவும் அரசு விதிமுறைகள் தளர்க்கபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன... இரு சக்கர வாகனம், ஆட்டோக்கள், கார்கள், சரக்கு வாகனங்கள் என தரம் பிரித்து சுமார் ரூ.1000 முதல் ரூ.5,000 வரை வசூலிக்கின்றார்களாம்... புதிய வாகன பதிவுகளுக்காக வாகன ஷோரூம் விற்பனை பிரதிநிதிகளிடமிருந்து தவறாமல் கணிசமான தொகை வசூலாகின்றதாம்...

மேலும், சில புதிய வாகனங்கள், ஆர்டிஓ அலுவலகத்துக்கு வராமலும் பதிவு செய்யப்படுவதாகவும் வலுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது... 

ஷோரூம் விற்பனை பிரதிநிதிகளும் ஆர்டிஓ செலவு என்று குறிப்பிட்ட தொகையை அப்பாவி பொதுமக்களிடம் கொள்ளையடிக்கின்றனர்... மொத்தத்தில் ஏமாறுவது அப்பாவி பொதுமக்களே...!


உரிமம்

தற்போது பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் போன்றவை ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அரசு செயல்படுத்தி வருகிறது.. இந்நிலையிலும், வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணபித்து ஆன்லைனில் கட்டணம் செலுத்திவிட்டு சென்றாலும் பொதுமக்களிடம் மேலும் ரூ.300 முதல் ரூ.500 வரை  தனியாக கட்டணம் வசூலிக்கின்றனர் என்று பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் முழுமையாக பயிற்சி பெறாதவர்களும், வாகனம் ஓட்ட தெரியவில்லையென்றாலும் ஓட்டுநர் பயிற்சி பள்ளியினரிடம் அதிக கட்டணம் வசூலித்து ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது...  

அதாவது ஒரு மாதத்தில் சுமார் 3,000 ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியர் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது... அதாவது ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் குறைந்த பட்சமாக மாதம் ரூ-.9,00,000/- (3000 X 300) தனி கட்டணம் வசூலிக்கின்றனர் என்ற அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது... 

வாகன உரிமம் பெயர் மாற்றம்

இதேபோன்று, வாகன உரிமம் பெயர் மாற்றத்திற்கு அரசு கட்டணம் போக சுமார் ரூ-.3000 முதல் ரூ.5000 வரை வசூலிப்பதாகவும்... குற்றச்சாட்டுகள் உள்ளது... குறிப்பாக கன ரக வாகனங்கள் பெயர் மாற்றுவதற்கு தனி கட்டணம் அதிகம்... அதிலும் சில வாகனங்கள் பெயர் மாற்றத்தில் சிக்கல்களும் உள்ளன... அதுபோன்ற வாகனங்கள் பெயர் மாற்றத்திற்கு சுமார் ரூ.50 ஆயிரம் அதற்கும் மேல்.. வசூலிப்பதாகவும் கன ரக வாகன வட்டார தகவல் தெரிவிக்கின்றன...

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில்தான் இப்படி வகை வகையாக தனி கட்டணம் வசூலிக்கின்றனர் என்றால்... வாகன சோதனை சாவடியில் இதை மிஞ்சும் அளவிற்கு தனி கட்டணம் தனி ராஜங்கம் நடத்தப்படுகிறது...

சோதனை சாவடிகள்

தமிழக-ஆந்திர எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை மற்றும் சேர்க்காடு பகுதிகளில் இரு சோதனை சாவடிகள் இயங்குகின்றன. 

காட்பாடி வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியானது தங்கச்சுரங்கம் போன்றது என்றே சொல்லலாம். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த சோதனைச் சாவடியில் பணியாற்ற மோட்டார் வாகன ஆய்வாளர்கள் முட்டி மோதுகிறார்கள். அத்துடன் இந்த சோதனைச் சாவடிக்கு எவ்வித தொடர்பும் இல்லாத வெளிநபர்களும் வேலை செய்கின்றனர். அதாவது லாரி ஓட்டுநர்களை அழைத்து வந்து வசூல் வேட்டை நடத்துவதில் சாமர்த்திய சாலியாக உள்ளனர்.


அதாவது விதிமுறைகளுக்கு உட்பட்டு சுமை ஏற்றி வரும் முறையான வாகனங்களும் தலா ரூ.1000 வீதம் செலுத்திதான் செல்லவேண்டுமாம்... அதிக சுமை ஏற்றி செல்லும்  (Overload vehicle) வாகனங்களுக்கு பெயரளவில் அபராதம் விதித்துவிட்டு அதிகப்படியான தொகையை தனியாக வசூலிக்கின்றனர்... இதனால் அரசுக்கு கோடிகணக்கான வருவாய் இழப்பு ஏற்படுகின்றது... ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் செல்கின்றது என்று கணக்கிட்டால் லட்சங்களில் கல்லா கட்டுகின்றனர்... 24 மணி நேரமும் பணமழைதான்...  

இதுகுறித்து விசாரித்தால் அவர்கள் கூறும் காரணமே வேற லெவல்... தமிழக அரசு எங்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.  எனவே கேஸ் எழுதவேண்டும் என்றும் பாதி தொகையை அபராதமாகவும், பாதி அவர்களது கணக்கிற்காகவும் கணக்குபோட்டு கச்சிதமாக கல்லா கட்டுகின்றனர்.  இதில் வசூலாகும் தொகையை நாங்கள் பாதியும், மீதியை அரசுக்கும் உடனுக்குடன் வழங்கி விடுகிறோம் என்று தைரியமாக கூறுகின்றனர். இப்படி அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆபத்தானவர்கள் வட்டார போக்குவரத்து சோதனைச் சாவடியில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் என்ற பெயரில் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆட்சியில்தான் இந்த அவலம் என்றால் தற்போது திமுக ஆட்சியிலும் அதே நிலைதான்... ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை...

அரசு கஜானா காலியாக உள்ளது... அரசுக்கு எவ்வாறு நிதி திரட்டுவது என்று குழு அமைத்து முதலமைச்சர் சிந்திக்கின்றார்.... நிதி அமைச்சரோ அரசுக்கு வருவாய் ஈட்டுவது எப்படி... அரசு திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்குவது எப்படி... திமுக அரசு அளித்துள்ள தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற நிதி மேலாண்மை  என்று பல்வேறு வகைகள் திட்டம் வகுத்து  தூக்கம் களைந்து ஆராய்ந்து செயலாற்றுகின்றனர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை...  

கொரோனாவால் உலக மக்களின் பொருளாதாரம் சரிந்து கடினமான சூழ்நிலையில் உள்ளனர்... மிக பெரிய வியாபாரிகள்கூட நலிந்து உள்ளனர் என்பதுதான் தற்போதைய நிலை... 

இந்நிலையிலும், காட்பாடி வட்டார போக்குவரத்து அலுவலக சோதனைச் சாவடியில் வசூல் வேட்டை அமோகமாக நடந்து வருகிறது. கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து அச்சுறுத்தி பரவி வரும் வேளையில் வசூல் வேட்டை மட்டும் குறையாமல் பார்த்து கொள்கின்றனர். அவர்கள் காட்டில் பணமழை பொழிவது நிற்பதில்லை....  

கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு நெய்யிக்கு அலைவது போல் உள்ளது அரசு கஜானா நிரப்ப பாடுபடும் முதலமைச்சர் மற்றும் நிதி அமைச்சரின் நிலை என்றுதான் சொல்லவேண்டும்... 

வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேர்மையாக பணியாற்றினால் அரசு கஜானா வேகமாக நிரம்ப ஆரம்பித்துவிடும்... அரசு கோடிகணக்கில் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் முக்கிய இடத்தில் பணியாற்றுவது வட்டார போக்குவரத்து அலுவலர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை... 

ஓவர் லோடு கட்டணத்தை முறையாக வசூலித்தால் கோடிகணக்கில் வருவாய் வரும்... ஆனால் சோதனைச் சாவடியில் பணியாற்றும் அதிகாரிகள் ஓவர் லோடுக்கு குறைந்த தொகையை அபராதமாக வசூலித்துவிட்டு கனிசமாக இவர்கள் தனி கட்டணத்தை வசூலித்துவிடுகின்றனர்... வாகன உரிமையாளர்களுக்கு இது லாபகரமாக உள்ளதால் அவர்களும் அதே பாணியை பின்பற்றுகின்றனர்... விதிமுறைகளை மறந்து விலைபோகின்றனர் அதிகாரிகள்...

அண்மையில், இதை அம்பலபடுத்தி ஒரு வீடியோ வைரலானது... அதாவது சேலத்தை சேர்ந்த 5 நெல் அறுக்கும் இயந்திரத்தை தெலுங்கானாவுக்கு ஓட்டுனர்கள் ஓட்டி சென்றுள்ளனர். அப்போது காட்பாடி வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் ஒரு வண்டிக்கு 500 ரூபாயும், காவல் துறை சோதனைச்சாவடியில் ஒரு வண்டிக்கு 300 ரூபாயும் லஞ்சம் வசூலிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது....  அதாவது, காவல் துறையை சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பிரகாஷ் என்பவர் அந்த 5 வாகனங்களை விரட்டிசென்று தலா 300 ரூபாய் லஞ்சமாக பெற்றுள்ளார்.  ஆர்டிஓக்கு  500 ரூபாய் தருகின்றீர்கள்  என்று ஒப்புதல் வாக்குமூலத்துடன் சிறப்பு உதவி ஆய்வாளர் பிரகாஷ் கூறியது அம்பலமானது-....

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலிசார்  சோதனைச் சாவடி அலுவலகத்தில் காலை சுமார் 5:30 மணி அளவில் திடீரென நுழைந்து சோதனை செய்தனர். அதிகாலையிலேயே கணக்கில் வராத ரொக்கப் பணம் அதிகாமாக கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இதில் மிக சுவரஸ்யம் என்னவென்றால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையின் போதே ஓட்டுநர்கள் வழக்கம்போல் வந்து கப்பம் கட்டியதுதான்... பேரிடியாக இருந்தது... அந்த அளவுக்கு வாகன ஓட்டிகளை பழக்கப்படுத்தி வைத்துள்ளனர் என்றுதான் சொல்லவேண்டும்... 

அரசுக்கு கட்டவேண்டிய கட்டணம் விவரங்களை விட இவர்களுக்கு கட்டவேண்டிய கப்பம் கணக்குதான் சரியாக உள்ளது... 

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடிதான் இப்படியென்றால் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று சேர்க்காடு சோதனைச் சாவடியில் பணியாற்றுபவர்கள் செயலாற்றுகின்றனர்..

அதாவது, சோதனை சாவடி குறித்து தொடர் குற்றச்சாட்டுகளை விசாரிக்க செய்தியாளர் ஒருவர் சேர்காடு சோதனை சாவடிக்கு சென்று விசாரித்துகொண்டிருந்தார்... அப்போது அங்கிருந்த பெண் அதிகாரி ஒருவர் ஒழுக்க சீலர் போன்று விளக்கம் அளித்துவந்தார்... அப்போது அமர்ந்திருந்த செய்தியாளரிடம் ஒரு லாரி டிரைவர் வேகமாக வந்து ரூ.ஆயிரத்தை கொடுத்து விட்டு திரும்பவும் வேகமாக சென்று விட்டார். சோதனைச் சாவடியில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்ற செய்தியை சேகரிக்க சென்ற செய்தியாளரிடமே ஓட்டுநர் தவறுதலாக லஞ்சம் வழங்கியது கும்பிட போன தெய்வம் குறுக்க வந்து வரம் தந்தது போலானது... இது நடந்தது பட்டப்பகலில் என்றால் நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. எழுதப்படாத சட்டமாக வாகனத்திற்கு ரூ.1000ம் வாங்குகிறார்கள் என்பது அம்பலமானது...

ஒழுக்க சீலராக பேசிய அந்த பெண் அதிகாரி என்ன செய்வதென்று தெரியமால் விழி பிதுங்கி நின்றார். லஞ்சம் லாவன்யம் அம்பலமானதும்.. செய்தியாளரையே விலை பேச ஆரம்பித்துவிட்டார்... அனைத்து செய்தியாளர்கள் விலைபோகிறவர்கள் இல்லை என்பதை அவர் மறந்துவிட்டார்...

ஆக ஒட்டுமொத்தமாக பழகுநர் உரிமம் முதல் சோதனை சாவடி வரையில் கணக்கிட்டு பார்த்தால்..  வேலூர் வட்டாரப்  போக்குவரத்து அலுவலகத்துக்கு லஞ்சமாக ஒருநாளைக்கு தோராயமாக குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் வருமானம் வருகின்றது... மாதம் எவ்வளவு, வருடம் எவ்வளவு என்று கணக்கிட்டால் கண் சுற்றும்..

இதுகுறித்து விசாரித்தால், வசூல் செய்வதை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலக உதவியாளர் முதல் போக்குவரத்து அமைச்சர் வரை பங்கு பிரிப்பதாக கூறுகின்றனர்...

அதுமட்டுமின்றி, லஞ்சம் ஒழிப்புத்துறையினர் கண்கொத்தியாக கண்காணித்தாலும் அவர்களுக்கும் தண்ணிகாட்டுவிதமாக திட்டம் போட்டு திருடர் கூட்டம் திருடிகொண்டே இருக்கும் என்ற பாடல் வரிகளுக்கேற்ப திட்டம் போட்டு மாட்டிகொள்ளாமல் வசூல் வேட்டையில் தற்போது ஈடுபடுகின்றனர்... அலுவலகத்து வெளியில் தனி ஏஜண்டுகளை நியமித்து வசூல் செய்வதாக தகவல் கசிந்துள்ளது... 

வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினால் பல கோடிகள் சிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை... 

இவர்களது வீடு மட்டுமல்லாது, உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் வீடுகளிலும் அதிரடி சோதனை நடத்தினால் பல கோடி மதிப்புள்ள நகை, பணம் சொத்துக்கள் என அசையும் சொத்துக்களும், அசையாத சொத்துக்களும் கையகப்படுத்தலாம் என்கின்றனர் நன்கு விவரம் அறிந்தவர்கள்...

இதுபோன்றவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இவர்களது முகத்திரை கிழியும். இல்லையெனில் பசுத்தோல் போர்த்திய புலி போன்று வலம்வந்து கொண்டிருப்பார். அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும் இதுபோன்றோர் மீது துறைரீதியான நடிவடக்கை எடுக்கவேண்டும்...  

அச்சம் தவிர் என்கின்ற வார்த்தை தவறுதலாக புரிந்துகொண்டு அச்சமின்றி மாமூல் வாங்குகின்றனர்... லஞ்சம் ஒழிப்புத்துறை இதுபோன்றோர் மீது எப்போதும் பார்வை பதிய வைத்திருக்கவேண்டும்...  அப்போதுதான் இவர்கள் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில்,  மாமூல் என்கின்ற பெயரில் லஞ்சம் வாங்க அச்சம் கொள்வார்கள்...

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலரிடம் தொடர்புகொண்டு கேட்ட போது ஒற்றை வார்த்தையில் அப்படி இல்லை என்று கூறி அலைபேசியை துண்டித்துவிட்டார்... உண்மை என்னவென்று துறைரீதியாக விசாரத்தால்தான் உண்மை வெளிவரும்...

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலை 11 மணியளவில் லஞ்சஒழிப்பு துணைபோலீஸ் சூப்பிரண்டு சரவணக்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் வட்டாரபோக்குவரத்து அலுவலகத்துக்குள்  அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.1½ லட்சம் சிக்கியது. இந்த பணத்தை கழிவறை, படிக்கட்டுகளில் பதுக்கிவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது... காலையிலேயே ரூ.1½ லட்சம் சிக்கியது  என்றால் மாலையில் சோதனையிட்டிருந்தால் எவ்வளவு சிக்கியிருக்கும் என்று அப்போது பொதுமக்கள் பரவலாக பேசினர்...


No comments

Thank you for your comments