Breaking News

வேலை-வாழ்க்கை இடையே சமநிலையை பராமரிக்க வேண்டும்

சென்னை, டிச.28-

வேலை-வாழ்க்கை இடையே  சமநிலையை பராமரிக்க வேண்டும் எனவும், ஒருவரின் தொழில் கடமைகளுக்கும் மற்றும் குடும்ப பொறுப்புகளுக்கும் சமஅளவிலான முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

திருமதி வி எல் இந்திரா தத் எழுதிய “டாக்டர் வி எல் தத்: ஒரு முன்னோடியின் வாழ்க்கை பயணத்தின் பார்வைகள்” என்ற ஆங்கில புத்தகத்தை குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு சென்னையில் நேற்று வெளியிட்டார். 

இந்நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு  பேசியதாவது, 

வேலைக்கும், வாழ்க்கைக்கும் இடையே சமநிலையை தொழிலாளர்கள் எளிதாக பராமரிக்கும் வகையில் மனிதவள கொள்கைகளை தொழில்துறை தலைவர்கள் வகுக்க வேண்டும். இது ஊழியர்களின் சிறந்த செயல்பாட்டுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், சமூகத்தில் தற்போது அதிகரிக்கும்  மனநல பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் உதவும். அதிகளவிலான மன அழுத்தத்தை மக்கள் சந்திக்கும் வேலையில்  உடல்நலத்துடன் மனநலமும் முக்கியத்துவம் பெறுகிறது. மன அழுத்தத்தை போக்க வெளியிடங்களுக்கு சென்று மக்கள் சிறிது நேரம் செலவிட வேண்டும். குடும்ப வாழ்க்கைக்கும், தொழிலுக்குமான சமநிலையை தொழில் அதிபர் வி எல் தத் சரியாக பராமரித்தார். இது அனைத்து தொழில் அதிபர்களுக்கும், தொழில் முனைவோருக்கும் பாடமாக இருக்க வேண்டும்.


மக்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு திரு தத் அதிக முக்கியத்துவம் அளித்தார். தற்போதைய போட்டி தொழில் சூழலில் இந்த குணத்தை காண முடியவில்லை. திரு தத்துக்கு அவரது தொழிலாளிகள் எப்போதும் முக்கியமானவர்களாக இருந்தார்கள். அவர்களின் நலனில் அதிக அக்கறை  செலுத்தினார். இந்த புத்தகத்தில் தனது கணவரின் நினைவுகள் மற்றும் அனுபவங்களை திருமதி வி எல் இந்திரா தத் பகிர்ந்துள்ளது பாராட்டத்தக்கது.

திரு தத் மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தாலும், மூத்தோர்களை மதிக்கும்  நற்குணம்,  பணிவு, சேவை, இரக்கம் ஆகியவற்றை அவர் ஒருபோதும் மறக்கவில்லை. நமது நாகரீக மதிப்புகளுக்கு இந்த குணங்கள் முக்கியமானவை. திரு தத் போன்றவர்களிடமிருந்து  தற்போதைய தலைமுறையினர் உத்வேகம் பெற வேண்டும். விளையாட்டின் மீது திரு தத் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். விளையாட்டு மற்றும் வெளிப்புற நடவடிக் கைகளில் இளம் தொழில்முனைவோர்கள் சிறிது நேரம் செலவிட வேண்டும்.

கடந்த 1991-92-ம் ஆண்டில் அரசுக்கும், தொழில்துறைக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்துவதில் எப்ஐசிசிஐ தலைவராக திரு தத் முக்கிய பங்காற்றினார்.

இவ்வாறு குடியரசு துணைத் தலைவர்  திரு வெங்கையா நாயுடு பேசினார். இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி, தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வி மெய்யநாதன், கேசிபி நிறுவன தலைவரும் மற்றும் நிர்வாக இயக்குனருமான டாக்டர் வி எல் இந்திரா தத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments