முக்கிய தமிழகச் செய்திகள் தொகுப்பு....
தேசிய சுகாதாரத்துறை தரவரிசை
பட்டியலில் தமிழ்நாடு முன்னிலை
சென்னை, டிச.28-
2019-20-ம் ஆண்டிற்கான மாநில சுகாதாரக் குறியீட்டின் நான்காவது பதிப்பை நிதி ஆயோக் நேற்று வெளியிட்டது.
“ஆரோக்கியமான மாநிலங்கள், முற்போக்கு இந்தியா” என்ற தலைப்பிலான அறிக்கை, சுகாதார செயல்பாடுகளில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் செயல்திறன் மற்றும் ஒட்டுமொத்த நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை தரவரிசைப்படுத்துகிறது.
2019-20-ம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த தரவரிசையின் படி, பெரிய மாநிலங்களின் வரிசையில் கேரளா மற்றும் தமிழ்நாடு முன்னணியிலும், சிறிய மாநிலங்களில் மிசோராம் மற்றும் திரிபுரா முன்னணியிலும், யூனியன் பிரதேசங்களில் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன், டையு மற்றும் சண்டிகர் முன்னணியிலும் உள்ளன.
நிதி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார், தலைமை நிர்வாக அதிகாரி திரு அமிதாப் காந்த், கூடுதல் செயலாளர் டாக்டர் ராகேஷ் சர்வால் மற்றும் உலக வங்கியின் மூத்த சுகாதார நிபுணர் திருமிகு ஷீனா சாப்ரா ஆகியோர் கூட்டாக இந்த அறிக்கையை வெளியிட்டனர்.
உலக வங்கியின் தொழில்நுட்ப உதவியுடன், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துடன் நெருங்கிப் பணியாற்றி இந்த அறிக்கையை நிதி ஆயோக் உருவாக்கியுள்ளது.
மாநில சுகாதாரக் குறியீடு என்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான வருடாந்திர கருவியாகும். ‘சுகாதார விளைவுகள்’, ‘ஆளுமை மற்றும் தகவல்’ மற்றும் ‘முக்கிய உள்ளீடுகள்/செயல்முறைகள்’ ஆகிய பிரிவுகளின் கீழ் தொகுக்கப்பட்ட 24 குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்ட கூட்டுக் குறியீடு இதுவாகும்.
ஒத்த மாநிலங்களுக் கிடையேயான ஒப்பீட்டை உறுதிப்படுத்த, ‘பெரிய மாநிலங்கள்’, ‘சிறிய மாநிலங்கள்’ மற்றும் ‘யூனியன் பிரதேசங்கள்’ என தரவரிசை வகைப்படுத்தப்பட்டுள்ளது.
2017 முதல் இந்த அட்டவணை தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. வலுவான சுகாதார அமைப்புகளை உருவாக்குவதற்கும், சேவைகளை மேம்படுத்துவதற்கும் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைத் தூண்டுவதை இந்த அறிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
👀👀👀👀👀👀
மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதை உடனடியாக ரத்து செய்யவேண்டும்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம்
சென்னை, டிச.28-
தமிழகத்தில் மின் கட்டணத்தில் ஜிஎஸ்டி சேர்த்துள்ளதற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
மின்கட்டணத்துக்கு GST வசூலிப்பதை உடனடியாக ரத்து செய்வதோடு, இந்த விவகாரத்தில் அரசு வெளிப்படையாக செயல்படவேண்டும் என விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு:
தமிழக மக்கள் மின் கட்டணத்தை ஏற்கனவே அதிக அளவில் செலுத்தி வரும் நிலையில், தற்போது ஜிஎஸ்டி வரியை மறைமுகமாக மின் கட்டணத்தில் சேர்த்திருப்பது மக்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது. இது மின்கட்டண உயர்வுக்கு மிகப் பெரிய அடித்தளமாக அமைந்துள்ளது.
ஏற்கனவே பெட்ரோலியப் பொருட்களும், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், தற்போது மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
மின் கட்டணத்தில் ஜிஎஸ்டி வரியை சேர்த்திருப்பது பற்றி மக்களுக்கு அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.
மேலும் மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்துவதால் மின் கட்டணம் அதிகரிப்பதோடு, அதனுடன் நிஷிஜி வரியும் சேர்த்துள்ளதால், மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
மின்கட்டணத்துக்கு நிஷிஜி வசூலிப்பதை உடனடியாக ரத்து செய்வதோடு, இந்த விவகாரத்தில் அரசு வெளிப்படையாக செயல்படவேண்டும்.
என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் செலுத்துவதால் மின் கட்டணம் அதிகரிப்பதோடு, அதனுடன் GST வரியும் சேர்த்துள்ளதால், மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. மின்கட்டணத்துக்கு GST வசூலிப்பதை உடனடியாக ரத்து செய்வதோடு,இந்த விவகாரத்தில் அரசு வெளிப்படையாக செயல்படவேண்டும்(2-2) pic.twitter.com/JjKEvWTmbZ
— Vijayakant (@iVijayakant) December 27, 2021
👀👀👀👀👀👀
ஆவண எழுத்தர் நல நிதியத்திற்கு புதிய அரசாணை வெளியீடு
சென்னை, டிச.28-
ஆவண எழுத்தர் நல நிதியத்திற்கு 28.10.2010 அன்று 183 ஆம் எண்ணுள்ள அரசு ஆணை வெளியிடப்பட்டது.
அந்த அரசு ஆணை புதிய நிபந்தனைகளுக்கு உட்பட்டு திருத்தப்பட்டு புதிய அரசு ஆணையாக 178 என்ற எண்ணுடன் 24.12.2021ல் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய அரசு ஆணையில், ஆவண எழுத்தர் நல நிதியத்தில் உறுப்பினர்களாக சேர நுழைவு கட்டணமாக ஒருமுறை மட்டும் ரூபாய் 1000 வசூலிக்கப்படும்.
பதிவு செய்யப்படும் ஆவணம் ஒன்றுக்கு தலா 10 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு ஆவண எழுத்தர் நல நிதியத்தில் சேர்க்கப்படவேண்டும் இந்தத் தொகை இணைய வழியாக மட்டுமே செலுத்தப்பட வேண்டும். நல்ல உதவிகளுக்கான தகுதிகள் மற்றும் நடைமுறைகள் உருவாக்கப்படும் ஓய்வு வயது 60 என நிர்ணயிக்கப்படுகிறது. நலத்திட்ட உதவி தொகை பதிவுத்துறை தலைவர் ஒப்புதலுடன் பதிவுத்துறை தலைவர் மற்றும் கணக்காளரால் கூட்டாக ஒப்பளிக்கப்பட வேண்டும்
👀👀👀👀👀👀
அரையாண்டு விடுமுறையில் பள்ளிகளைத் திறந்தால் நடவடிக்கை
சென்னை, டிச.28-
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறை காலத்தில் எந்தப் பள்ளிகளைத் திறந்தாலும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நேற்று (27-12-2021) உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் டிசம்பர் 25ம் தேதியிலிருந்து ஜனவரி 2ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சில தனியார் பள்ளிகள் விடுமுறை நாள்களிலும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருவதாக தமிழக அரசுக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து, ஜனவரி 2ஆம் தேதி வரை பள்ளிகளைத் திறக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. அரையாண்டு விடுமுறை நாள்களில் நேரடி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகள் நடத்தக் கூடாது எனவும் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆணை பிறப்பித்துள்ளார்.
👀👀👀👀👀👀
உதயநிதி கூட்டத்தில் ஒமைக்ரான் பரவாதா? -டி.டி.வி.தினகரன் கேள்வி
சென்னை, டிச.28-
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஒமைக்ரான் பரவும் என்று தி.மு.க அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களோ? என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது,
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஒமைக்ரான் பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா?
ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஒமைக்ரான் பரவும் என்று தி.மு.க அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களோ?.. இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது. மக்களைப் பற்றி கவலையும் கிடையாது! 'தீய சக்தி கூட்டம்' என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
👀👀👀👀👀👀
வேலூர் நில அதிர்வு
வருகிறது ஆய்வு குழு
வேலூர், டிச.28-
வேலூரில் தொடரும் நில அதிர்வுகள் தொடர்பாக ஆய்வு செய்ய, ஓரிரு நாட்களில் டெல்லியில் இருந்து சிறப்பு குழு வரவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நில அதிர்வு உணரப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுகிறது. வேலூர் அருகே, கடந்த மாதம் 29-ம் தேதி மற்றும் டிசம்பர் 24, 25-ம் தேதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
இதையடுத்து அச்சம் காரணமாக குடியாத்தம், பேரணாம்பட்டு, தரைகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
இதையடுத்து, வேலூர் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பேரிடர் மேலாண்மை பேராசிரியர் கணபதி உள்ளிட்ட குழுவினர் பேரணாம்பட்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட தரைக்காடு பகுதியில், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு அப்பகுதி பொதுமக்களிடம் நில அதிர்வு குறித்து அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், தொடர் நிலஅதிர்வுகளால் பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும், பலவீனமாக உள்ள 40 வீடுகளில் லேசான விரிசல் காணப்படுவதாகவும், அவற்றில் வசித்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு புதிதாக வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், வேலூர் மாவட்டத்தில் நில அதிர்வுகள் தொடர்வது குறித்து ஆராய, டெல்லியில் இருந்து சிறப்பு குழு வரவுள்ளதாகவும் ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
👀👀👀👀👀👀
சத்தியமங்கலம் அருகே
எலிக்கு வைத்த கூண்டில்
அரிய வகை மரநாய்
சத்தியமங்கலம். டிச. 28-
சத்தியமங்கலம், விளாமுண்டி வனச்சரகத்திற்குட்பட்ட ஒப்பல வடலூர் என்ற இடத்தில் எலிக்கு வைத்த கூண்டில் அரிய வகை மரநாய் சிக்கியது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், செந்நாய், காட்டெருமை, காட்டுப்பன்றிகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியே வந்து ஊருக்குள் சென்று விவசாயிகள் பயிரிட்டிருக்கும் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இதனால் விவசாயிகள் வன விலங்குகளிடமிருந்து பயிர்களை காக்கும் பொருட்டு பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சத்தியமங்கலம், விளாமுண்டி வனச்சரகத்திற்குட்பட்ட ஒப்பல வடலூர் என்ற இடத்தில் சவுந்தராஜன் என்ற விவசாயி தனது தோட்டத்தில் பல்வேறு வகையான காய்கறிகளை பயிரிட்டுள்ளார்.
மேலும் இவரது நெல் வயல்களில் எலிகளின் தொல்லை அதிகமாக இருந்து வந்தது. எலிகள் வயல் வெளியில் புகுந்து நெற்பயிர்களைகளை சேதப்படுத்தி வந்தன. இதனால் அவருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் எலிகளிடம் இருந்து நெற்பயிர்களை காப்பாற்ற எலியை பிடிக்க முடிவு செய்து கூண்டு வைத்தார். அந்த கூண்டில் அரியவகை விலங்கான மரநாய் சிக்கியது.
இதுகுறித்த தகவல் அப்பகுதியில் பரவியது ஏராளமான மக்கள் மரநாயை பார்த்தனர். இதுகுறித்து சவுந்தரராஜன் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தார். வனச்சரகர் சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டார். பின்னர் மரநாய் மீட்கப்பட்டு அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
👀👀👀👀👀👀
விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்து போட மறுத்த மனைவியை கொலை செய்த கணவன்
திருவள்ளூர், டிச.28-
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே விவகாரத்துப் பத்திரத்தில் கையெழுத்துப் போட மறுத்த மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டான்.
அய்யநேரி கிராமத்தைச் சேர்ந்த தமிழ்மணி - மங்களா தம்பதிக்கு 14 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. 2 மகன்கள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 3 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், மனைவியிடம் விவாகரத்துப் பத்திரத்தில் கையெழுத்து போடுமாறு தமிழ்மணி கேட்டதாகவும் அவர் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தமிழ்மணி, வீட்டிலிருந்த கத்தி ஒன்றை எடுத்து, மனைவியின் உடலில் சரமாரியாகக் குத்தியுள்ளான்.
இதில் படுகாயமடைந்த மங்களா மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தலைமறைவாக இருந்த தமிழ்மணியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
👀👀👀👀👀👀
கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த 4 சிறுவர்கள் கைது..!
திருவள்ளூர், டிச.28-
திருவள்ளூரில் துணிக்கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நேரு சாலையில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்கு வந்த பரத் என்பவரை முன்விரோதம் காரணமாகப் பத்தியால் பேட்டையைச் சேர்ந்த சிறுவர்கள் 4 பேர் கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் கடைக்குள் புகுந்த அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி கடையில் இருந்த 1,000 ரூபாயை எடுத்துச் சென்றனர்.
படுகாயமடைந்த பரத் போலீசில் புகாரளித்ததன் பேரில் அந்த 4 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.
No comments
Thank you for your comments