குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்து விபத்து!.... முதல்வர் நிவாரணம் அறிவிப்பு... குற்றஞ் சாட்டும் அதிமுக...
திருவொற்றியூர், டிச.28-
திருவொற்றியூர் கிராமத்தெரு அருகே அரிவாகுளம் பகுதியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் இருந்த 24 வீடுகள் நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. வீடுகள் இடிந்து விழுந்து பாதிப்படைந்தவர்களுக்கு உடனடியாக மாற்று வீடுகள் வழங்கவும், 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 1 லட்சம் நிவாரண உதவி அறிவித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னையை புறநகர் பகுதியான திருவெற்றியூரில் 4 மாடிகள் கொண்ட 336 குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ளன. 1998 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த வீடுகள், தேனாம்பேட்டை திருவொற்றியூர் உள்பட சென்னை மாநகரின் பல்வேறு பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் இந்த வீடுகளில் கடுமையான விரிசல் ஏற்பட்டதாக இங்குள்ள பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்திருந்தனர். இதையடுத்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் சிறுசிறு பணிகளை மேற்கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் இரவு 24 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு லேசாக விரிசல் ஏற்பட்டது. அந்த பகுதியில் இருக்கும் திமுக பகுதி செயலாளரிடம் பொதுமக்கள் இது குறித்து புகார் கூறினர்.
இதனையடுத்து, முன்னெச்சரிக்கையாக அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்து காலை பத்து மணியளவில் வெளியேறிக் கொண்டிருந்தனர்.
குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியேறிய சற்று நேரத்திலேயே கட்டிடத்தின் பேஸ் மட்டம் பகுதியில் இருந்து பயங்கர சத்தம் கேட்ட நிலையில், டி பிளாக்கில் இருந்த 24 வீடுகளும் சீட்டுக்கட்டு போல் கண் இமைக்கும் நேரத்தில் சரிந்து விழுந்து தரைமட்டமானது.
கண் எதிரே வீடுகள் சரிந்து விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள், பதற்றமடைந்து செய்வதறியாமல் கதறி ஓடியதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சியளித்தது.வீடு சரிந்து விழுந்ததில், குடியிருப்புவாசிகளின் டி.வி., குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட உடைமைகள் அனைத்தும் சிக்கி சேதமடைந்தன.
இதனிடையே, தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் ஒரு கட்டிடம் மட்டும் இடிந்து விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், மற்ற கட்டிடங்களில் வசித்து வந்தவர்களும் வீட்டை பூட்டி விட்டு வெளியேறி வருகின்றனர்.
முன்னெச்சரிக்கையாக வீடுகளில் வசித்தோர் வெளியேறிவிட்டதாக கூறப்படும் நிலையில், கட்டிடத்தில் யாரேனும் சிக்கியுள்ளார்களா என தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்தோடு, அங்கிருந்த வீடுகளில் பயன்படுத்தப்பட்ட சமையல் சிலிண்டர்கள் சேதமடைந்து கேஸ் வெளியேறி வருவதால், தீ விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், மீட்பு பணிகள் மிக நுணுக்கமாகவும், கவனமாகவும் நடைபெற்று வருகின்றன.
மேலும், தீ விபத்து நிகழாமல் தடுக்க தீயணைப்புத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதியில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஏ,பி,சி,டி, உள்ளிட்ட ஏழு பிளாக்குகள் இருக்கின்றன. மொத்தமாக 336குடியிருப்புகள் இருக்கும் நிலையில், தற்போது, டி பிளாக்கில் இருந்த 24 வீடுகளும் இடிந்து விழுந்துள்ளன.
ஏற்கனவே, மழைக் காலங்களில் வீடுகளில் அவ்வப்போது விரிசல் ஏற்படுவதும், கசிவும் ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் யாருக்கும் உயிர் இழப்பும் இல்லை என தெரிகிறது. இருப்பினும் ஒரு குழந்தை மட்டும் காணவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவொற்றியூரில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தினால் 1993&ல் கட்டப்பட்ட பழைய குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 24 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்து அதனால் மக்கள் பாதிப்படைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன்.
விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களை நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அனுப்பி வைத்து, விபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு உடனடியாக மாற்று குடியிருப்புகள் வழங்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.
பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்பிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் துவங்க 24 குடும்பங்களுக்கும் தலா ரூபாய் 1 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இதுபோன்ற விபத்து ஏற்படாத வகையில் பழைய குடியிருப்புகளின் விபரங்களைச் சேகரிக்கவும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்வாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திருவொற்றியூர் கிராமத்தெரு அரிவாக்குளம் பகுதியில் சரிந்து மண்ணில் புதைந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளை முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நேற்று பார்வையிட்டார்.
அப்போது முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டியில் கூறியதாவது,
இங்குள்ள குடிசை மாற்று வாரிய வீடுகள் சேதமடைந்து விரிசல் கண்டிருப்பது குறித்து 3 மாதத்திற்கு முன்பே மக்கள் புகார் அளித்திருக்கிறார்கள், ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, கிட்டதட்ட 336 குடியிருப்புகள் இந்த பகுதியில் இருக்கிறது. அதில் குடியிருக்கும் குடும்பங்களுக்கும் மாற்று இடங்கள் வழங்கப்பட வேண்டும். புதிய வீடுகள் கட்டப்படும் வரை இந்த மக்களுக்கு வாடகையும் வழங்கப்பட வேண்டும், சாதாரணமாக ஆயிரம், இரண்டாயிரம் வழங்கினால் போதாது, தற்போது வீட்டு வாடகை எவ்வளவோ அதனை இரண்டு வருடத்திற்கு மாதந்தோறும் வழங்க வேண்டும். குடியிருப்பில் விரிசல் வெளிப்படையாக தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது வேதனையளிக்கிறது.
3 மாதத்திற்கு முன்பே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த பிரச்னை எழுந்திருக்காது. இப்போது அவர்களது உடமைகள் புதைந்திருக்கின்றன. பணம் நகைகள் எங்கே என்பது தெரியவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக இருக்கிறார்கள், அவர்களின் கண்ணீரை துடைக்க வேண்டும். அரசு அளித்துள்ள ரூ.1 லட்சம் நிதி உதவி போதாது குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும்.
அவர்களுக்கு உண்ண உணவு, இருக்க இடம், அன்றாட வாழ்க்கைக்கு தேவையானவற்றை வழங்க வேண்டும். இவ்வாறு, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறினார். இந்த ஆய்வின் போது முன்னாள் எம்எல்ஏவும் திருவொற்றியூர் மேற்கு பகுதி செயலாளருமான குப்பன் உடன் சென்றார்.
No comments
Thank you for your comments