Breaking News

தூய்மை காவலர்களை பணிநிரந்தரம் செய்ய ஏஐடியுசி வலியுறுத்தல்

அரூர், டிச. 13: 

ஊராட்சி, பேரூராட்சி உள்பட உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என ஏஐடியுசி சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம், மொரப்பூரில் ஏஐடியுசி சங்க 102 ஆம் ஆண்டு கொடியேற்று விழா, ஏஐடியுசி முனிசிபல் பொது பணியாளர் சங்க பேரவைக் கூட்டம், அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவர் மனோகரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தூய்மைக் காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கரோனா பொதுமுடக்க நேரத்தில் பணிபுரிந்த தூய்மைக் காவலர்களுக்கு அரசு சார்பில் சிறப்பு ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.

கிராம ஊராட்சிகளில் குப்பைகளை எடுத்துச் செல்லும் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டர்களுக்கு 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, ஊதிய உயர்வு மற்றும் நிலுவைத் தொகையினை வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு வாரம் ஒருநாள் விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், ஏஐடியுசி சங்க மாவட்ட பொதுச் செயலர் கே.மணி, மாவட்டத் தலைவர் எம்.மாதேஸ்வரன், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.சுதர்சனன், மாவட்ட துணைச் செயலர் ஆர்.நடராஜன், மாவட்ட பொருளர் ஏ.முருகன், ஒன்றியத் தலைவர் சுமதி, மாவட்டக்குழு உறுப்பினர் துளசி, சங்க நிர்வாகிகள் தமிழ்வாணன், செல்வம், புவனேஸ்வரி, லட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments

Thank you for your comments