திமுக ஆட்சியில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சி... முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் புகார்
சென்னை
ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக்க பெருந்தன்மையுடன் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தீபா, தீபக் ஆகியோருக்கு மாஜி அமைச்சர் ஜெயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை மாங்காடு பகுதியில் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்களை வழங்கிய பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டியின் விவரம்:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த இல்லம் நினைவு இல்லமாக இருக்கவேண்டும். இதற்கு மேல்முறையீடு செய்ய ஆலோசனை செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் இதுதான் அதிமுக நிலை. அதற்கு தீபா,தீபக் முழு ஒத்துழைப்பு கொடுப்பதன் மூலம்தான் ஜெ.,வுக்கு செய்கின்ற சிறப்பாக அது அமையும். இதில் அவர்களை பொருத்தவரை பெருந்தன்மையோடு, முழுமையாக ஜெ வரலாற்றை அடுத்த தலைமுறையினர் அறியும் வகையிலே சரித்திரம் பேச படவேண்டும் என்ற அளவிற்கு அவர்கள் முழுமையான ஒத்துழைப்பு தருவதுதான் சிறந்த தீர்வாக இருக்க முடியும்.
இப்போது முதலமைச்சருக்கு ஒத்தூதினால் அது கருத்து சுதந்திரம். ஆட்சிக்கு எதிராகவும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராகவும் ஆரோக்கியமான விமர்சனங்களை வைத்தால் அது கருத்துச் சுதந்திரம் கிடையாது.
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மினி எமர்ஜென்சிதான் நடந்துவருகிறது. யாரும் பேசக்கூடாது. சபரீசனைப் பற்றி பேசக்கூடாது. உதயநிதியைப் பற்றி பேசக்கூடாது. யார் இன்றைக்கு ஆட்சி செய்கிறார்கள். திமுக தலைவர் ஸ்டாலினா ஆட்சி செய்கிறார் .சபரீசன்தான் இன்றைக்கு ஆட்சி செய்கிறார்.
மாரிதாஸ் கருத்துக்குள் நான் போகவிரும்பவில்லை. தேச நலன், தேச பாதுகாப்பு என்பதுதான் எங்கள் கொள்கை. ஆனால் இந்த ஆட்சிக்கு எதிராக யார் வாயைத் திறந்தாலும் உடனடியாக குண்டர் சட்டத்தில் போடுவது, பொய் வழக்குத் தொடுப்பது எப்படிச் சரியாக இருக்கும். இப்படிப்பட்ட கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான அரசு, மினி எமர்ஜென்சி போன்றுதான் இன்றைக்கு நடந்துகொண்டிருக்கிறது.
டிஎன்பிசியில் 20 சதவீதம் தமிழில் படித்தால்தான் வேலை. இந்த ஆணையைப் போட்டது நாங்கள். இவர்கள் இந்த ஆணையைப் போட்டதுபோல பில்டப் செய்து வருகிறார்கள். அன்று மத்திய அரசோடு போராடி 11 மருத்துவக் கல்லூரிகளைப் பெற்றோம். பல மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகப்படுத்தப்பட்டது. இவை அனைத்தும் நடந்தது ஜெ ஆட்சியில். நாங்கள் கட்டிய கட்டிடத்தை இன்றைக்கு கத்திரிக்கோல்வைத்து ஜோராகச் சென்று திறக்கிறார்கள்.
வேளாண் சட்டத்தைப் பற்றி வாய்கிழியப் பேசுகிறார்களே. பொட்டாஷ் உரம் 1700க்கு விற்பனை ஆகிறது. கட்டுமான பொருட்களின் விலை என்ன. அத்தியாவசிய பொருட்கள், மளிகை சாமான்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.
சந்தி சிரிக்கும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு உள்ளது.
இவ்வாறு, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி அளித்தார்.
No comments
Thank you for your comments