Breaking News

தலைமை அலுவலகங்களுக்கு ஆர்.டி.ஐ., மனு அனுப்ப வேண்டாம்... தகவல் ஆணையம்

சென்னை:

சென்னை-மாவட்ட அலுவலகங்களில் தகவல்கள் பெற, நேரடியாக தலைமை செயலகத்துக்கும், துறை தலைமை அலுவலகங்களுக்கும் மனு அனுப்ப வேண்டாம் என, தகவல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.


தமிழகத்தில், அரசு நிர்வாக செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை பொது மக்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பெறலாம். இதற்காக, ஒவ்வோர் அரசு அலுவலகத்திலும், பொது தகவல் அலுவலர், மேல் முறையீட்டு அலுவலர்கள் உள்ளனர். இதில் மனுதாரர்களுக்கு உரிய முறையில் தகவல்கள் கிடைப்பதை உறுதி செய்ய, மாநில தகவல் ஆணையம் செயல்படுகிறது.

இரண்டாவது மேல் முறையிட்டு மனுக்களை மட்டுமே, இந்த ஆணையம் விசாரித்து உத்தரவுகள் பிறப்பிக்கும். இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்துவதில் மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது. 

இதனால், அரசு அலுவலகங்களுக்கு வரும் மனுக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில், பெரும்பாலான மக்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்தை தவிர்த்து, துறை தலைமை அலுவலகத்துக்கும், தலைமை செயலகத்துக்கும், ஆர்.டி.ஐ., மனுக்களை அனுப்புகின்றனர். 



இந்த மனுக்களை வாங்கும் தலைமை அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு அனுப்பி, மனுதாரருக்கு தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது

இது தொடர்பாக, மாநிலதகவல் ஆணையம் வழங்கியுள்ள அறிவுரைகள்:

ஆர்.டி.ஐ., வாயிலாக, மாவட்ட அலுவலகங்களில் பெற வேண்டிய தகவல்கள் கோரும் மனுக்களை, நேரடியாக தலைமை செயலகத்துக்கும், துறை தலைமை அலுவலகத்துக்கும் அனுப்பாதீர். மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு அனுப்பவும்; பின், மேல் முறையீடு செய்யவும்கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

பொது அதிகார அமைப்புகள், ஆர்.டி.ஐ., மனுக்களுக்கு வழங்கும் தகவல்களின் பிரதிகளை ஆணையத்துக்கு அனுப்ப வேண்டாம். தகவல் நகல்களை மேல் முறையீட்டு மனு விசாரணையின் போது தாக்கல் செய்தால் போதும். இவ்வாறு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

No comments

Thank you for your comments