வரதராஜ பெருமாள் கோவில் கருவறையில் சுவாமியுடன் மத்திய இணை அமைச்சர் புகைப்படம்... கிளம்பிய புது சர்ச்சை
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் கருவறையில் சுவாமியுடன் மத்திய இணை அமைச்சர் எடுத்துக் கொண்ட புகைப்படம்.
புகைப்படத்தை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி. புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கோவில் நகரம், புண்ணிய நகரம், முக்தி தரும் நகரம், என புகழ் பெற்று விளங்கும் காஞ்சிபுரத்தில் உள்ள புராதான கோவில்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய வெளியுறவு மற்றும் கலை கலாச்சார துறை இணையமைச்சர் மீனாட்சி லோகி காஞ்சிபுரம் வருகை தந்தார்.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற வைகுண்ட பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில், மற்றும் உலக பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோவிலான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சுவாமி தரிசனம் செய்து கோவில்களில் புராதான சிற்பங்களையும் சின்னங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்து விட்டு சென்றார்.
இந்நிலையில் அத்திவரதர் கோவிலான வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த மத்திய இணையமைச்சர் மீனாட்சி லோகி கட்டுப்பாடுகள் நிறைந்த கோவில் கருவறையில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கழுத்தில் ஆளுயர மாலையுடன், கருவறையிலுள்ள மூலவர் வரதராஜப்பெருமாள் சுவாமி தெரியும் படி கோவில் செயல் அலுவலர் தியாகராஜன்,கோவிலின் பட்டாச்சாரியார்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
சுவாமியுடன் மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லோகி உள்ள புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கோவில் கருவறைக்குள் புகைப்படம் எடுக்கவோ, செல்போன் பயன்படுத்தவோ கூடாது என கோவில் நிர்வாகத்தினரும் கோவில் பட்டாச்சாரியார்களும், பொது மக்களுக்கும் பக்தர்களுக்கும் அறிவுறுத்தி வந்த நிலையில் அதனை மீறும் வகையில் மத்திய அமைச்சருடன் கோவில் செயல் அலுவலரும், கோவில் பட்டாச்சாரியார்களும் புகைப்படம் எடுத்து உள்ளது பெரும் சர்ச்சையும், பக்தர்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவிலில் கருவறையில் விதிமுறைகளையும்,மரபுகளையும், மீறிய கோவில் செயல் அலுவலர் மீதும்,கோவில் பட்டாச்சாரியார்கள் மீதும் தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்களும்,சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments
Thank you for your comments