நில அதிர்வால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் நிவாரணம்
வேலூர்:
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு வட்டம் தரைக்காடு பகுதியில் நில அதிர்வால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து நிவாரணம் பொருட்களை வழங்கி, பாதிக்கப்பட்ட வீடுகளை வீதிவீதியாக நடந்து சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் நேற்று (26.12.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பேர்ணாம்பட்டு வட்டம் தரைக்காடு பகுதியில் நில அதிர்வால் பாதிக்கப்பட்ட வீடுகளை ஆய்வு செய்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியும் பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது.
பேர்ணாம்பட்டு, திருப்பத்தூர், ஆந்திராவில் உள்ள சித்தூர் போன்ற பகுதிகளில் இதுவரை ‘மூன்று தடவை 3.5 ரிக்டர் அளவுகோலில் நிலஅதிர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நில அதிர்வினால் கட்டிடங்கள் சேதம் அடைவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. ’ஆனால் தற்போது நிலஅதிர்வு பேர்ணாம்பட்டு பகுதியில் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியானது மலை சரிவான பகுதி என்பதால் அதிர்வுகளால் கட்டிடங்களின் கீழ்மட்டத்தில் வலு இல்லாத காரணத்தினால் சிறு சிறு விரிசல்கள் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடந்து 40 வீடுகளில் உள்ள மக்களை அமைப்புசாரா நிறுவனங்கள் மூலம் மூன்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் வருவாய்த் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறு இடத்தில் பட்டா வழங்கி அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் உறுதியான முறையில் கட்டி தரப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
மேலும் ஓரிரு நாட்களில் டெல்லியில் இருந்து ஆய்வு குழுவினர் பேர்ணாம்பட்டு பகுதிக்கு வருகை புரிந்து நிலப்பகுதியை ஆய்வு செய்ய உள்ளனர் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர், பேர்ணாம்பட்டு நகராட்சி ஆணையர், பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments