28-12-2021 அன்று "நலம் காப்போம் கொல்லிமலை, பழங்குடியினருக்கான விழித்தெழு சிறப்பு மருத்துவ முகாம்"
நாமக்கல், டிச.27-
நாமக்கல் மாவட்டம் செம்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள 10 கிராமங்களுக்கான “நலம் காப்போம் கொல்லிமலை, பழங்குடியினருக்கான விழித்தெழு சிறப்பு மருத்துவ முகாம்” நாளை (28.12.2021) நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி. சிங் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பி. சிங் அவர்கள் இன்று (27.12.2021) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
செம்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள சீக்குப்பாறைபட்டி, கூச்சக்கிராய்பட்டி, தண்ணிமாத்திப்பட்டி, பூங்குளம்பட்டி, சக்கரைப்பட்டி, சித்தூரனிப்பட்டி, திண்டுப்பட்டி, புரணிக்காடு மற்றும் கீழ்சோளக்காடு ஆகிய 10 கிராமங்களை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கான “நலம் காப்போம் கொல்லிமலை, பழங்குடியினருக்கான விழித்தெழு சிறப்பு மருத்துவ முகாம்” செம்மேடு, வல்வில் ஓரி அரங்கில் நாளை (28.12.2021) நடைபெறவுள்ளது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் நூற்றுக்கணக்கான மலை கிராமங்களில் பழங்குடியின மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அவர்களின் நலன் காக்கும் வகையில் சுகாதார மேம்பாட்டிற்காக கொல்லிமலையில் 1 அரசு மருத்துவமனை, 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 16 துணை சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் மருத்துவ வாகனங்கள் உள்ளிட்டவைகள் வாயிலாக மருத்துவ வசதிகள் மற்றும் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வட்டாரந்தோறும் வரும் முன் காப்போம் திட்ட முகாம்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை வட்டாரம் பரந்து விரிந்து பல்வேறு சிறிய குக்கிராமங்களை கொண்டுள்ளது. மலை பகுதிகளில் உள்ள மக்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் எளிதில் கிடைக்கவும், அவர்களின் உடல்நலனை காக்கும் மருத்துவ ஆலோசனைகளை முன்கூட்டியே தெரிவித்து மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகளை வழங்க கொல்லிமலை பகுதிகளில் 16 இடங்களில் அப்பகுதியை சுற்றியுள்ள குக்கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொள்ளும் வகையில் “நலம் காப்போம் கொல்லிமலை, பழங்குடியினருக்கான விழித்தெழு சிறப்பு மருத்துவ முகாம்கள்” நடத்தப்படவுள்ளன.
முதலாவதாக, நாளை (28.12.2021) அன்று செம்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள 10 கிராமங்களை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கான “நலம் காப்போம் கொல்லிமலை, பழங்குடியினருக்கான விழித்தெழு சிறப்பு மருத்துவ முகாம்” செம்மேடு, வல்வில் ஓரி அரங்கில் நடைபெறவுள்ளது.
இம்முகாம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள், செயற்கை அவையங்கள் தேவைப்படுபவர்களுக்கு அளவெடுத்தல், மருத்துவ பரிசோதனை செய்து தேசிய அடையாள அட்டை வழங்குதல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, கண் பரிசோதனை, இருதய துடிப்பு பரிசோதனை (ஈ.சி.ஜி), கர்ப்பிணித்தாய்மார்களுக்கு ஸ்கேன் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த முகாமில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பங்கு பெற்றுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த இதயம், கண், காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளும், மருந்து, மாத்திரைகளும் வழங்கவுள்ளார்கள். சிகிச்சை தேவைப்படுபவர்கள் மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாம்கள் நடைபெறுவது குறித்து ஊராட்சி; செயலாளர்கள், கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம செவிலியர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தெரிவித்து மருத்துவ முகாம்களில் கலந்து கொள்ள செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தி;ட வேண்டும். இந்த சிறப்பு முகாம்களில் கொல்லிமலை பகுதி பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு அரசுத்துறையின் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் சேவைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீட்டில் உள்ள முதியோர்கள், இயலாதவர்கள், நோய்வாய்ப்பட்டவர்களை இந்த முகாம்களுக்கு அழைத்து வந்து உடல்நலம் குறித்த மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள செய்ய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
No comments
Thank you for your comments