சுற்றுச்சூழல் காக்க மஞ்சள் பை பயன்படுத்த வேண்டுகோள் விடுப்பு! - அமைச்சர் மா.மதிவேந்தன்
நாமக்கல், டிச.27-
முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்துள்ளபடி, சுற்றுச்சூழல் காக்க அனைவரும் மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர்.மா.மதிவேந்தன் வேண்டுகோள் விடுத்தார்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் மலையாம்பட்டி அருந்ததியர் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியை சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள் 26.12.2021 அன்று திறந்து வைத்தார்.
மேலும், இராசிபுரம் ஊராட்சி ஒன்றியம், வடுகம் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினையும், பட்டணம் பேரூராட்சி நேரு நகரில், ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியினையும், பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார். இராசிபுரம் வட்டம், மலையாம்பட்டி, வடுகம், பட்டணம் பேரூராட்சி, பிள்ளாநல்லூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மக்களைத்தேடி சட்டமன்ற உறுப்பினர் நிகழ்ச்சிகளில் பொதுமக்களுடன் கலந்துரையாடி நன்றி தெரிவித்து குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் பொதுமக்களிடம் பேசும்போது தெரித்ததாவது,
முதலமைச்சர் அவர்கள் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதோடு, புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றார்கள். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் பிற்காலத்தில் வேலைவாய்ப்பு பெறும் வகையிலும், உயர்ந்த நிலைக்கு செல்லும் வகையிலும் பெரியியல், உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு செய்ததோடு, அவர்களுக்கு விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் அரசே ஏற்க உத்தரவிட்டுள்ளார்கள். படித்த இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிடும் வகையில் கடந்த 6 மாதங்களில் பல்லாயிரம் கோடி மதிப்பீட்டில் புதிய தொழில்கள் தொடங்க தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து தொழிற்சாலைகளுக்கு தேவையான பல்வேறு வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், “மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தை அறிமுகப்படுத்திவுள்ளார்கள். நாமக்கல் மாவட்டத்தில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் பெண் சுகாதாரத் தன்னார்வலர்களும், இயன்முறை மருத்துவர்களும், நோய் ஆதரவு சிகிச்சை செவிலியர்களும் இல்லம் தேடி வரும் சேவையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இத்திட்டத்தின் கீழ் இரத்த அழுத்த பாதிப்புக்குள்ளான 48,414 நோயாளிகள், 23,569 சர்க்கரை நோயளிகள், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் என இரண்டு நோய்களாலும் பாதிப்புக்குள்ளான 20,604 நோயாளிகள், தசை சிதைவு, பக்க வாதம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட 10,021 நபர்களுக்கும், நோய் ஆதரவு சிகிச்சை 10,285 நபர்களுக்கும் என மொத்தம் 112893 நபர்களுக்கு தொடர்சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சாலை விபத்துகளால் ஒருவர் கூட உயிரிழக்க கூடாது என்பதற்காக, இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 திட்டத்தை தொடங்கியுள்ளார்கள். இத்திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இத்திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளில் விருப்பப்பட்ட மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற இயலும். 48 மணி நேரத்திற்கு எந்தவித கட்டணமும் இன்றி இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படுகின்றது. இதன் காரணமாக சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்கள் உயிரிழப்பு ஏற்படாமல் காக்க படுகின்றார்கள். இத்திட்டத்தின் கீழ் எந்த மாநிலம், எந்த நாடு என்று பாராமல் விபத்தில் பாதிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை அளிக்க முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் அவர்கள் வலியுறுத்துள்ளபடி, சுற்றுச்சூழல் காக்க அனைவரும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மீண்டும் மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், நாமக்கல் கோட்டாட்சியர் மஞ்சுளா, ஒன்றியக்குழுத் தலைவர் கே.பி.ஜெகநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.துரைசாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர்.எம்.துரைசாமி, ஏ.கே.பாலச்சந்திரன், திருமதி.சத்யா வெங்கடாச்சலம், முன்னாள் எம்பி. பி.ஆர்.சுந்தரம், பட்டணம் பேரூராட்சி முன்னாள் தலைவர் நல்லதம்பி, இராசிபுரம் வட்டாட்சியர் கார்த்திகேயன் உள்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments