மாநில திட்டத்தில் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களாலும் சாதிக்க முடியும்
அரூர் :
அரசுப் பள்ளிகளில் மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களாலும் சாதிக்க முடியும் என திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த பாளையம் கிராமத்தில் ஸ்ரீ அம்மன் காவலர் பயிற்சி மையம் சார்பில், உடல் உறுப்பு தானம் மற்றும் ரத்த தானம், காவல்துறை உள்ளிட்ட இதர அரசுத் துறையில் பணியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், நண்டுப்பள்ளம் அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் அ.சி.ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார்.
இதில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், திருப்போரூர் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான எஸ்.எஸ்.பாலாஜி பேசியதாவது :
சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக். பாடத்தில் திட்டத்தில் படித்தால் மட்டுமே நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளில் வெற்றிப் பெற முடியும் என்பதல்ல. அரசுப் பள்ளிகளில் மாநில பாடத்தில் திட்டத்தில் படிக்கும் மாணவர்களாலும் சாதிக்க முடியும். டிஎன்பிஎஸ்சி, காவலர் தேர்வுகள் உள்ளிட்ட தனியார் பயிற்சி மையங்களை நடத்தும் நிறுவனங்கள் வணிக நோக்கத்தில் மட்டுமே செயல்படுகின்றன.
ஆனால், அரூரை அடுத்த பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் காவலர் பயிற்சி மையம் சார்பில், 100க்கும் மேற்பட்ட ரத்த தான முகாம்களை நடத்தியுள்ளனர். அதேபோல், இந்த மையத்தில் பயிற்சி பெற்று காவல் துறையில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் உடல் தானம் செய்வதாக உறுதிமொழி படிவங்களை வழங்கியுள்ளனர்.
பயிற்சி மையங்களை நடத்துவோர், அந்த மையங்களில் சிறப்பிடம் பெற்று அரசு பணியில் சேரும் மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து, ரத்த தானம், உடல் தானம் செய்த இளைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை அவர் வழங்கினார்.
இந்த விழாவில் அகில இந்திய திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்க தேசியத் தலைவர் டி.ஆர்.கவியரசு, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழக இலக்கியத்துறைத் தலைவர் பெ.இளையாபிள்ளை, உதவிப் பேராசிரியர் சீமான் இளையராஜா, ஸ்ரீ அம்மன் காவலர் பயிற்சி மைய நிறுவனர் அ.சி.தென்னரசு அழகேசன், பயிற்சி மைய ஆசிரியர்கள் கே.எம்.தமிழரசன், சி.தீர்த்தகிரி, வெ.சுரேஷ், கோ.கிருஷ்ணன், வே.பசுபதி, சி.தமிழரசன், வ.சங்கரலிங்கம், உடற்பயிற்சியாளர் வெ.நடராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments
Thank you for your comments