சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எதிரொலி : அரூர் பெரிய ஏரி ராஜவாய்க்கால் அளவீடு பணிகள் தொடக்கம்
அரூர், டிச. 4:
அரூர் பெரிய ஏரியின் ராஜவாய்க்கால் அளவீடு (சர்வே) செய்யும் பணிகள் தொடங்கப்பட்டன.
தருமபுரி மாவட்டம், எச்.தொட்டம்பட்டி ஊராட்சியிலுள்ள அரூர் பெரிய ஏரி சுமார் 160 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியின் உபரிநீர் வெளியேறும் ராஜவாய்க்கால் அரூர் நகரின் மையப்பகுதி வழியாக செல்கிறது.
அரூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பெரியார் நகர், பாட்சாபேட்டை, மஜீத்தெரு, தில்லை நகர், திரு.வி.க நகர், கோவிந்தசாமி நகர் உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர் மற்றும் கழிவு நீர் செல்லும் கிளைக் கால்வாய்கள் ராஜவாய்க்காலில் இணைந்து வாணியாற்றில் சேருகிறது.
இந்த நிலையில், அரூர்-சேலம் பிரதான சாலையோரத்தில் ராஜவாய்க்கால் மற்றும் நீர்வழிப்பாதையை சிலர் நிரந்தர ஆக்கிரமிப்பு செய்து கட்டடங்களை கட்டியுள்ளனர். இதனால், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்குவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்தனர்.
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு :
தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மாநில அரசு தீவிரப்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு புதன்கிழமை (டிச.1) உத்தரவிட்டது.
இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் எதிரொலியாக, அரூர் பெரிய ஏரியின் ராஜவாய்க்கால் செல்லும் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய் கோட்டாட்சியர் வே.முத்தையன் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, ராஜவாய்க்கால் அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டனர்.
அரூர் பெரிய ஏரியின் ராஜவாய்க்கால் 2.4 கிலோ மீட்டர் தூரமும், 3.8 மீட்டர் அகலமும் கொண்டதாகும்.
இதையடுத்து, ராஜவாய்கால் சீரமைப்பு செய்யும் பணிகளுக்காக ரூ. 10 லட்சம் செலவாகும் என திட்ட மதிப்பீடு செய்து, தமிழக அரசின் நிர்வாக அனுமதிக்காக அனுப்பப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments