நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு உடனடியாக நிறைவேற்றும்... அமைச்சர் தா.மோ.அன்பரசன்
காஞ்சிபுரம்:
தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 300 வாக்குறுதி நிறைவேற்றி இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வர் என்ற பெயரை பெற்றிருப்பவர் நம் முதல்வர். நியாயமான கோரிக்கைகளை தமிழக முதல்வரின் அரசு உடனடியாக நிறைவேற்றும் என்று சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர் மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையிலும் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர்,காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் மற்றும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த முகாமில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து, சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது,
தேர்தல் அறிக்கையில் சொன்ன அனைத்து திட்டங்களும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் 2000 வீதம் இரண்டு தவணையாக மக்களுக்கு நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டது. மேலும் மகளிர் சுய உதவி குழு கடன், நகை கடன், வரும் முன் காப்போம் திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம் என பல்வேறு மக்கள் பணிகளை அரசு செய்து வருகின்றது.
தேர்தலுக்கு முன்பு திமுக ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு அனைத்து திட்டங்களும் செய்து தருவோம் என கூறி 505 தேர்தல் வாக்குறுதிகளை தந்திருந்தோம். ஆட்சிப் பொறுப்பேற்ற ஏழு மாத காலத்தில் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வர் என்ற பெயரைப் பெற்றிருக்கின்ற ஒரே முதல்வர் நம்முடைய தமிழக முதல்வர் மட்டும்தான்.
நியாயமான கோரிக்கைகளை தமிழக முதல்வரின் அரசு உடனடியாக நிறைவேற்றும்.
பின்னர், வேளாண்மை துறைக்கு என்று தனி பட்ஜெட் அறிவித்திருக்கின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான். கிராமபுறங்களில் இருக்கின்ற மாணவர்கள் தொழிற்கல்வி படிப்பதற்காக 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தந்து அந்த மாணவர்கள் படிக்க கூடிய அந்த கட்டணத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்து அதை செயல்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கின்ற அரசு திராவிட முன்னேற்ற கழகத்தின் அரசு.
இதனைத் தொடர்ந்து வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டை, முதியோர் உதவி தொகை, பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பணி ஆணை ,வேளாண் மற்றும் உழவர் பாதுகாப்பு திட்டம் சார்பில் தார்ப்பாய், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் மாடித் தோட்டம், ஊட்டச்சத்து காய்கறிகள், காய்கறி விதைகள் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்கொடி குமார்,மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நித்யா சுகுமார், ஒன்றிய குழு துணை தலைவர் திவ்யபிரியா இளமது,ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார்,குமணன்,மாவட்ட கவுன்சிலர்கள் வனிதா மகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.
No comments
Thank you for your comments