Breaking News

தலைமுறை தலைமுறையாய் நாட்டுக்கு சேவை... பிபின் ராவத் கடந்து வந்த பாதை

புதுடெல்லி:  

இந்திய முப்படைகளுக்கும் தலைமை தளபதியாக பதவி வகித்த முதல் ராணுவ ஜெனரல் என்ற பெருமையை பெற்ற பிபின் ராவத், தமிழகத்தின் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார்.  

முப்படையின்  தலைமை தளபதி  பிபின் ராவத் கடந்து வந்த பாதை

தற்போதைய உத்ததரகாண்ட் மாநிலத்தின் பவுரியில் 1958ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி இந்து ரஜபுத்திர வம்சத்தில் பிறந்தவர் பிபின் ராவத். அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்திய ராணுவத்தில் பல தலைமுறைகளாக பணியாற்றியுள்ளனர். பிபின் ராவத் தந்தை லெட்சுமண் சிங் ராவத் இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக பணிபுரிந்தவர். 

பிபின் ராவத் டேராடூன் மற்றும் சிம்லாவில் பள்ளிப் படிப்பை படித்தார். அப்போதே கடக்வாஸலா தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் டேராடூன் இந்திய ராணுவ அகாடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றவர். 

வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு பாதுகாப்பு பிரிவு உயர் அதிகாரிகளுக்கான கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பின்னர் அமெரிக்காவின் ஃபோர்ட் லீவன்வொர்ட் நகரில் உள்ள ராணுவ கல்லூரியில் உயர் படிப்பை படித்தார். 

மேலும் சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் எம்.பில்., மேலாண்மை மற்றும் கணிணி அறிவியலில் பட்டயப்படிப்பை பெற்றுள்ளார்.

1978ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதன்முதலாக ராணுவத்தின் கூர்க்கா துப்பாக்கிப்படை ஐந்தாவது பட்டாலியனில் சேர்ந்து பணியாற்றினார்.  இது அவரது தந்தை பணியாற்றி வந்த இடமாகும். 

ராணுவத்தின் பல்வேறு நிலைகளில் சிறப்பாக பணியாற்றிய அவர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்று, 19வது காலாட்படை உரி பிரிவின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றார்.

The Chief of Defence Staff (CDS), General Bipin Rawat inspecting the Tri-Service Guard of Honour, in New Delhi on January 01, 2020.

கடந்த 2016ம் ஆண்டு ராணுவ தலைமை அதிகாரியாக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பிபின்ராவத், ராணுவ ஜெனரல் தல்பீர்சிங் சுஹாக் ஓய்வுக்கு பின்னர், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி இந்திய ராணுவத்தின் 27வது தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்திய ராணுவத்தின் முப்படைகளுக்கும் தலைமை தளபதி பதவியை உருவாக்கியது.  அந்த பதவிக்கு பிபின் ராவத்தை மத்திய அரசு தேர்வு செய்தது. 

அதன்படி 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ஆம் தேதி இந்தியாவின் முதலாவது முப்படைகளின் தலைமைப் தளபதியாக பிபின் ராவத்தை குடியரசுத் தலைவர் நியமித்தார். அதனையடுத்து 2020 ஜனவரி ஒன்றாம் தேதி முப்படைகளின் தலைமைத் தளபதியாக பிபின் ராவத் பொறுப்பேற்றார். 

இதன் மூலம் அந்த பதவியை அலங்கரித்த முதலாவது ராணுவ ஜெனரல் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. அந்த பதவியில் இருக்கும் போதே ஹெலிகாப்டர் விபத்தில் அவர் உயிரிழந்தது நாட்டிற்கே பேரிழப்பாக அமைந்தது.

பிபின் ராவத்தின் சேவையை பாராட்டி பரம் விசிஷ்ட் சேவா விருது, யுத்தம் யுத்த சேவா விருது, சேனா விருது என பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

No comments

Thank you for your comments