Breaking News

ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பு

நீலகிரி:

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த விபத்தில் அவரது மனைவி மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள், விமானிகள் என 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது.

கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிபின் ராவத் சென்ற போது பிற்பகல் 12.27 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

அந்த ஹெலிகாப்டரில் ரிகேடியர் லிடர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், இராணுவ வீரர்கள் நாயக் குருசேவாக் சிங், நாயக் ஜிதேந்திரா குமார் ஆகியோரும் பயணித்தனர். நஞ்சப்புரா சத்திரம் என்ற இடத்தில் ஹெலிகாப்டர் மரத்தில் மோதி தீப்பிடித்து கீழே விழுந்து நொறுங்கியது...

விபத்து நிகழ்ந்த இடத்தின் அருகே குடியிருப்புகள் உள்ளதால் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

ஹெலிகாப்டரில் எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்து, விபத்தில் சிக்கியவர்கள் மீட்க முயன்றனர். விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் காவல்துறைக்கு தகவல் தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன.

பிபின் ராவத் பயணமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதை அறிந்து அதிர்ச்சி அடைந்திருப்பதாக டிவிட்டரில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 

மீட்புப் பணிகளை துரிதப்படுத்த நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மீட்பு பணி குறித்து, நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாராவத் உள்பட 13 பேர் பலியானதாக இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட விமானி வருண் சிங்கிற்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட உயிரிழந்த அனைவரின உடல்களும் நாளை டெல்லிக்கு கொண்டு செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டையே உலுக்கிய   துயர சம்பவம்

நாட்டையே உலுக்கிய இந்த துயர சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்தவண்ணம் உள்ளனர்.

தலைவர்கள் இரங்கல்

தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் மறைவுக்கு பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித் ஷா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
பிரதமர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவ வீரர்களை இழந்தது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. நாட்டிற்காக அவர்கள் மிகுந்த தேசபக்தியுடன் சேவை செய்தனர். இந்த துயரமான தருணத்தில் என் எண்ணங்கள் எல்லாம் இறந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன.

ஜெனரல் பிபின் ராவத் மிகச்சிறந்த ராணுவ வீரர். உண்மையான தேசபக்தரான அவர், நமது ஆயுதப் படைகள் மற்றும் பாதுகாப்பு எந்திரங்களை நவீனமயமாக்குவதில் முக்கிய பங்காற்றினார். அவரது மறைவு என்னை மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ஓம் சாந்தி.  இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா   இரங்கல்

‘நமது தலைமை தளபதி பிபின் ராவத் துணிச்சலான வீரர்களில் ஒருவர். தாய்நாட்டிற்கு மிகுந்த பக்தியுடன் சேவை செய்தவர். மற்றவர்களுக்கு உதாரணமாக திகழும் அவரது பங்களிப்புகள் மற்றும் அர்ப்பணிப்புகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது’ என அமித் ஷா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.





No comments

Thank you for your comments